×

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு: ஒருநாள் தொடர் ரத்து

மும்பை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ஏப்.15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகளிடையேயான ஒருநாள் போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநில அரசு  விளையாட்டு போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. மேலும், கொரோனா பரவாமல் தடுக்க  கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியோவும் இதையே வலிறுத்தியிருந்தார். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ‘‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விளையாட்டு  போட்டிகளுக்காக கூட்டம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்’ என்று  மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்,  பிசிசிஐ உள்ளிட்ட விளையாட்டு  கூட்டமைப்புகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. ஐபிஎல் டி20 தொடரை தள்ளி வைக்கக்கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அதனால் இம்மாதம் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.  இதற்கிடையே கொரோனோ பிரச்னை  காரணமாக மத்திய அரசு  வெளிநாட்டினருக்கு இந்தியா வர வழங்கப்பட்ட விசா  ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்து விட்டது. அதனால்  ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஐபிஎல் தொடர் ஏப்.15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அணி உரிமையாளர்கள், வீரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பான கிரிக்கெட் அனுபவத்தை தர வேண்டும் என்பததையே பிசிசிஐ விரும்புகிறது. அதற்காக மத்திய அரசின் சுகாதாரம், விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பிசிசிஐ  செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

தள்ளி வைக்கப்பட்டாலும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 2 போட்டிகளும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


Tags : IPL ,Corona ,ODI , Corona, IPL Series Postponement
× RELATED இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு