×

காஷ்மீரில் 7 மாதமாக வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா விடுதலை: காங்கிரஸ், திரிணாமுல், சிபிஎம் வரவேற்பு

ஸ்ரீநகர்; காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது போடப்பட்ட  பொதுப் பாதுகாப்பு சட்ட வழக்கை ஜம்மு காஷ்மீர் அரசு ரத்து செய்து விடுதலை செய்துள்ளது.   காஷ்மீர் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், திரிணாமுல், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.  காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான  சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும்,  இந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும்  பிரித்தது. இதற்கு காஷ்மீர் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டங்கள்  வெடித்தது. இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க  முன்னெச்சரிக்கையாக அங்குள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,  அவரது மகன் உமர்அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி  உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், பரூக்  அப்துல்லா மீது கடந்த செப்டம்பர் 17ம் தேதி பொது பாதுகாப்பு சட்டம் (பிஎஸ்ஏ) பாய்ந்தது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது. பரூக் அப்துல்லா மீதான பிஎஸ்ஏ நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உட்பட  அனைத்து  எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்திலும்   பிரச்னை கிளப்பப்பட்டது. எம்பி.யாக உள்ள பரூக் அப்துல்லாவை நாடாளுமன்ற   கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் அவருக்கு டிசம்பர் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட வீட்டுக்காவல் பின்னர் மார்ச் 11 வரை நீடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று மாலை பரூக் அப்துல்லா மீதான பிஎஸ்ஏவை ரத்து செய்வதாக காஷ்மீர் யூனியன் பிரதேச உள்துறை செயலாளர் சலீன் கப்ரா திடீரென அறிவித்தார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 7 மாதங்களாக  வீட்டுக் காவலில் இருந்த  பரூக் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை  அப்துல்லாவின் தேசிய  மாநாட்டு கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள  அறிக்கையில், ‘பரூக் அப்துல்லா மீதான வழக்கு வாபஸ் பெறப்படுவது  வரவேற்கத்தக்கது. இதேபோல், கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா மற்றும்  பிற கட்சிகளை சேர்ந்த அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய மத்திய  அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், `பரூக் அப்துல்லாவின் விடுதலை தாமதமாக நடைபெற்றாலும் அதை வரவேற்கிறேன். காஷ்மீர் மாநிலம் சந்தித்த பிரச்னை குறித்து அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்’ என்றார்.

இதேபோல் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் பரூக் அப்துல்லாவின் விடுதலையை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில் `பரூக் அப்துல்லாவை 7 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதன் மூலம் என்ன நீதி உணர்த்தப்பட்டுள்ளது. பின்னர் ஏன் அவரை விடுதலை செய்தனர். இந்த நடவடிக்கையின் மூலம் காஷ்மீரில் சர்வாதிகாரம் மற்றும் தன்னிச்சையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை அறிய முடிகிறது’ என்றார். சிபிஎம் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் `இந்த விடுதலை காலம் தாழ்ந்தது. பரூக் அப்துல்லாவை பிஎஸ்ஏவின் கீழ் காவலில் வைத்தது சட்டவிரோதம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மெகாபூபா முப்தியின் மகள் இதிஜா முப்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் `சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது காவலில் வைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டிய தருணம் இது’ என்று குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறுகையில்,` பரூக் அப்துல்லா நீண்ட நாட்கள் வாழ பிரார்த்திக்கிறேன். உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புகிறேன். அவர்களும் விடுதலையாகி ஜனநாயக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்தார்.

பரூக் அப்துல்லா நன்றி
விடுதலையான பரூக் அப்துல்லா நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், `எனது விடுதலைக்காக பிரார்த்தனை செய்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி. மற்றவர்கள் விடுதலையாகும் வரை அரசியல் தொடர்பாக பேசமாட்டேன். என்னை போன்று பிறரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என நம்புகிறேன். மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்ட பிறகே எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்’ என்றார். 


Tags : Trinamool ,Congress ,CPM Congress of Release ,CPM , Kashmir, Farooq Abdullah Liberation, Congress, Trinamool, CPM
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவின் வெற்றியை...