×

கோயம்பேடு உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது

அண்ணாநகர்: சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் தொடர்புகொண்ட மர்ம நபர், விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.  இதனால், மேற்கண்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபணர்களுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தீவிர சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அந்த செல்போன் எண் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சிக்னல் காட்டியது. உடனே தனிப்படை போலீசார்,  நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் கோயம்பேடு மார்க்கெட்டில் கண்காணித்து, அங்கு பதுங்கியிருந்த மாற்றுத்திறனாளி வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.  விசாரணையில் திருப்போரூர், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஐயப்பன் (35) என தெரிந்தது. அவர், போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், நான் மாற்றுதிறனாளி. அரசால் வழங்கப்படும் தொகுப்பு வீடு தொடர்பாக மனு கொடுக்க கடந்த 12ம் தேதி, தலைமைச்செயலகம் வந்தேன். அங்கு பணியில் இருந்த போலீசார் மனுவை கொடுக்கவிடாமல் என்னை விரட்டியடித்தனர். இதனால் விரக்தியடைந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன், என கூறியுள்ளார்.  இதையடுத்து, அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



Tags : Bomb detainee ,places ,Coimbatore ,detainee ,Bombay , Coimbatore, bomb threat, the alter ego, arrested
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்