×

பல்லாவரம் - ரேடியல் சாலையில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ராட்சத விளம்பர பலகை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. போக்குவரத்து மிகுதி காரணமாக இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  பள்ளிக்கரணையை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவர், கடந்த ஆண்டு செப்.12ம் தேதி தனது மகன் திருமணத்திற்காக இந்த சாலையின் சென்டர் மீடியனில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்திருந்தார். அந்த பேனர் காற்றில் பறந்து, அவ்வழியாக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் சுபஸ்ரீ (23) என்பவர் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால், அனுமதியின்றி விளம்பர பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவ்வாறு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும், விதிமீறி பேனர் வைப்பவர்களை கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.  அதன்பேரில், சமீப காலமாக குறைந்திருந்த விளம்பர பேனர் கலாச்சாரம், மீண்டும் மெதுவாக தலை தூக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக, பல்லாவரம் - ரேடியல் சாலையில், பல்லாவரம் பெரிய ஏரிக்கரையை ஆக்கிரமித்து தற்போது ராட்சத விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் கைவசம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரிக்கரையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பலகை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், பலத்த காற்று வீசும்போது, சாலையில் பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது. ஆனால், இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் பல்லாவரம் பெரிய ஏரி தூர்வாரப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதற்குள் மீண்டும் ஏரிக்கரையை ஆக்கிரமித்து, இவ்வாறு அனுமதியின்றி விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதே சாலையில் பேனர் விழுந்து பெரிய அளவில் விபத்து ஏற்பட்டும், அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் சாலையோரம் ராட்சத விளம்பர பலகை கைக்கப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பெருகி வரும் விபத்தினை கருத்தில் கொண்டு, சுபஸ்ரீ சம்பவம் போல், மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடக்கும் முன், அரசு இடத்தில் அனுமதியின்றி, ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பலகையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallavaram - Giant ,lake ,Radial Road ,Pallavaram - Radial Road , Pallavaram, Radial Road, Lake, Advertisement
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...