×

பம்மல், அனகாபுத்தூர் பகுதியில் 211 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்குவது எப்போது? பேரவையில் பல்லாவரம் எம்எல்ஏ கேள்வி

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசியதாவது:  பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று 1998ம் ஆண்டு இதே சட்டமன்றத்தில் தலைவர் கலைஞர் அறிவித்தார். அது 2016ம் ஆண்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்போது 200 அடி சாலை பல்லாவரம், துரைப்பாக்கம் சாலை போன்ற சாலைகளை அகல்படுத்துகின்ற பணிகள் ₹34 கோடியில் நெடுஞ்சாலை துறையின் மூலம் நடந்து வருகிறது.
அந்த பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் ஆர்சிசி பைப் 2008ம் ஆண்டு போடப்பட்டன. 12 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது சாலைகளை அகலப்படுத்துகின்ற பணியினால் அவற்றில் உடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி, மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

அதனை சரிசெய்ய சுமார் 30 கோடி தேவை என்று அதிகாரிகள் கணக்கிட்டு, கருத்துரு அனுப்பி இருக்கிறார்கள். எனவே, அதை நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில் பம்மல், அனகாபுத்தூர் பகுதியில் 211 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த திட்டம் எப்போது தொடங்கப்படும். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: துறை அதிகாரிகள் மூலம் பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆய்வு செய்யப்பட்டு, பைப்லைன் பழுதடைந்திருப்பின் அது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதேபோல பம்மல் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டது என்று சொன்னார்.

அது போன்று அறிவிக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட காலத்தில் கண்டிப்பாக பணிகள் ஆரம்பிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் போது, பல்வேறு சிரமங்கள் இருக்கிறன. நிறைய பேர் வழக்குகள் போடக்கூடிய நிலை உள்ளது. இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர், பல்வேறு பிரச்னைகளுக்கு அங்கே ஒத்துழைப்பு கொடுத்து கொண்டிருக்கிறார். எனவே, கண்டிப்பாக கூடிய விரைவில் அந்த திட்டம் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : Pammal ,Anakaputhur ,Pallavaram MLA , Pammal, Anakaputhur, Sewerage Project, Council, Pallavaram MLA
× RELATED சென்னை பல்லாவரம் அருகே...