×

எழும்பூர் அருகே சிக்னல் கோளாறு ரயில் சேவை 1 மணி நேரம் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை: எழும்பூர் - பூங்கா ரயில் நிலையம் இடையே நேற்று சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் வரையும், திருமால்பூரில் இருந்து மேற்கண்ட ரயில் நிலையங்கள் வழியாக சென்னை கடற்கரைக்கும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறின்றி விரைந்து செல்ல முடியும் என்பதாலும் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் என தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில், எழும்பூர் ரயில் நிலையம் - பூங்கா ரயில் நிலையம் இடையே சென்றபோது,  திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பின்னர், இதுபற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலர், வேறுவழியின்றி அருகே உள்ள ரயில்நிலையத்தில் இறங்கி ஆட்டோ மற்றும் பேருந்துகளில் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சிக்னல்  கோளாறு சரி செய்தனர். அதன் பிறகு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.



Tags : Egmore , Egmore, Signal Disorder, Rail Service
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...