×

பொது மக்கள் வருகை குறைவு; புளியடி பூங்காவில் அடிப்படை வசதிகள்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி பெரிய பூங்கா வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் சிறு சிறு பூங்காக்கள் உள்ளன. மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் முக்கடல் அணை பகுதியில் 2 பூங்காவை மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த பூங்காவிற்கு பல பகுதிகளில் இருந்து பொது மக்கள், மாணவ,மாணவிகள் வந்து செல்கின்றனர். இதுபோல் நாகர்கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமான புளியடியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.96 லட்சத்தில் பூங்காவை நாகர்கோவில் மாநகராட்சி அமைத்துள்ளது. இந்த பூங்கா 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பூங்கா செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் இந்த பூங்காவிற்கு வருவது இல்லை.

இதனால் இந்த பூங்கா வெறிச்சோடி கிடக்கிறது. மாநகராட்சி சார்பில் இந்த பூங்காவில் பணியாளர் ஒருவரை நியமித்துள்ளது. பூங்காவிற்குள் பொதுமக்கள் வருகை இல்லாத காரணத்தால் பூங்காவை தவிர காலியாக உள்ள இடங்களில் புற்கள் முளைத்துள்ளது. பூங்காவிற்கு அதிக மக்கள் வரும் வகையில் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த புளியடி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

புளியடி செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் புளியடி அருகே வீட்டுவசதிவாரியம் 400 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது.
 இந்த குடியிருப்பு பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த பூங்காவிற்குள் ஆட்கள் அதிக அளவு வருவார்கள். பூங்காவிற்குள் கழிப்பறை வசதியுள்ளது. மேலும் அங்கு வரும் மக்களுக்கு ஓய்வு அறை இல்லை. வெயில் காலங்களில் பொதுமக்கள் வரும்போது அவர்கள் இருந்து இழைப்பாற போதிய நிழல் வசதி இல்லை. இதனால் மரங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மரங்கள் வைத்து, பூங்காவை செழிப்பாக வைக்கும்போது, அதிக அளவு மக்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. புளியடி பூங்கா அருகே நான்கு வழிச்சாலை அமையவுள்ளது. இதனால் நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பூங்காவிற்குள் வந்து ஓய்வு எடுத்து செல்ல வசதியாக பூங்காவிற்குள் அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கவேண்டும். முக்கியமாக பூங்காவிற்கு குடிநீர் வசதி செய்துகொடுக்கவேண்டும். ரூ.96 லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள பூங்காவிற்கு அதிக மக்கள் வரும் வகையில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்துக்கொடுக்க வேண்டும். என்றனர்.

Tags : Puliyadi Park ,Municipal Park ,Nagercoil , Nagercoil, Municipal park, basic amenities
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...