×

கீழ்பென்னாத்தூர் அருகே ஒரே இரவில் 3 கோயில்களில் உண்டியல் உடைத்து பணம் துணிகர கொள்ளை

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கோயில்களில் உண்டியல் உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று மாலை சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். இதன்பின்னர் கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையில் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது அங்கிருந்த உண்டியல் பெயர்த்து எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சகர், அப்பகுதி மக்கள் உதவியுடன் தேடிப்பார்த்தார்.  உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு கோயில் பின்புறம் உள்ள வயல்வெளியில் மர்மநபர்கள் உண்டியலை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதேபோல் அதேபகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கேட்டில் வெல்டிங் மூலம் உண்டியல் இணைக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கருங்காலிகுப்பம் அடுத்த கரிக்கிலாம்பாடியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் கோயில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று அங்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 3 கோயில்களில் எவ்வளவு பணம் கொள்ளைபோனது என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த தனித்தனி புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கோயில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : temples ,Kippennathoor ,robbery ,Temple ,Ganesha , Temple robbery, robbery, Ganesha temple
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...