நாங்குநேரி அருகே இன்று 6ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி சாவு; குளிக்கச் சென்ற போது பரிதாபம்

நாங்குநேரி: நாங்குநேரி அருகே இன்று காலை கிணற்றில் குளிக்கச் சென்ற 6ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சேர்மகனி. இவர்களது மகள் கிருபாரதி (13), மகன் சரவணன் (11). இவர்கள் இருவரும் கரந்தானேரி அரசு பள்ளியில் முறையே 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சரவணன், வீட்டு அருகில் உள்ள வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான வயற்காட்டு கிணற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.

அப்போது அவர், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சத்தம்போட்டு அக்கம்,பக்கத்தினரை அழைத்தனர். அதற்குள் சரவணன் நீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சுமார் 75 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 60 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதனால் மீட்பு படை குழுவினரால் 50 அடிக்கு கீழே சென்று உடலை தேட முடியவில்லை. இதையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீரை 5 மோட்டார்கள் மூலம் இறைக்கும் பணி நடந்து வருகிறது. தண்ணீர் முழுவதும் வெளியேற்றிய பிறகு சரவணன் உடல் மீட்கப்படும். இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் சென்ற 6ம் வகுப்பு மாணவன், நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>