×

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு சூடு பிடிக்கும் மண்பானை விற்பனை

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பகுதியில் கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் மண்பாணை தயாரிப்பு, விற்பனையில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த பிப்ரவரி மாதம் முதலே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் அனல்காற்று வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக கரும்பு சாறு, இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, பழச்சாறு போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குஜிலியம்பாறை சாலையூரில் 15 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் பரம்பரையாக மண்பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் மண்பானை உற்பத்தி செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது மண்பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என அழைக்கப்படும் மண்பானைகள் அதிகம் விற்கப்படுகின்றன.
என்னதான் வீட்டில் பிரிஜ் இருந்தாலும் மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது போல் சுவை இருப்பதில்லை. மேலும் தற்போது இயற்கை முறைக்கு மக்கள் அதிகம் முக்கியத்துவம் தருகின்றனர். மின்சார செலவே இல்லாமல் நீரை குளிர்விக்கும் மண்பானையை தேடி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இது குறித்து சாலையூரை சேர்ந்த மண்பாணை தொழிலாளர் சுப்பிரமணி (47) கூறுகையில், ‘நான் 10 வயதில் இருந்தே கடந்த 35 ஆண்டுகளாக மண்பாணை தொழில் செய்து வருகிறேன். வண்டல் மண், வைக்கோல், சூளை உள்ளிட்ட உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகமாகிறது.  ஆனால் விற்பனை செய்யப்படும் மண்பாண்ட பொருட்களின் விலை குறைவாகவே உள்ளதால், போதிய வருமானம் இன்றி இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் தற்போது முன்னதாகவே கோடை வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் மண்பானையை தேடி வருகின்றனர்.

இதனால் தற்போது மண்பானை விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சிறிய மண்பானை ரூ.90க்கும், பெரிய மண்பானை ரூ.150க்கும் விற்கப்படுகிறது. எங்களிடம் மொத்தமாக பல்வேறு வடிவங்களில் மண்பானைகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள், மண்பானையில் குழாய் வைத்து, பானைகள் வடிவத்திற்கு ஏற்ப ரூ.250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்கின்றனர். மக்களிடையே இயற்கை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால், கோடை காலத்தில் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பது வாழ்நாள் முழுவதும் கேள்விக்குறியாகவே உள்ளது’ என்றார்.

Tags : Increase in summer sun impact Heat-selling earthenware
× RELATED காய்கறி வரத்து அதிகரிப்பு விற்பனையோ ...