×

பராமரிப்பு இல்லாததால் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வீடுகளுக்குள் வசித்து வருகிறோம்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் அரசு குடியிருப்பு வீடுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. சிவகங்கை கடந்த 1985ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் சாலையில் அமைக்கப்பட்டு கடந்த 1988ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலெக்டர்,எஸ்பி அலுவலகம் முதல் சுமார் 30க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்களும் கலெக்டர் வளாக அலுவலகத்தில் இயங்கி வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலக கட்டிடங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகள் என அனைத்தும் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் கடுமையான சேதமடைந்த நிலையில் இருந்து வருகின்றன.

ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் கட்டிடத்தின் மேற்கூரைகள் சிதைந்து விழுவது, சிலாப்புகள் உடைந்து விழுவது என்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. இவைகளை அவ்வப்போது சிறிய அளவில் பராமரிப்பு செய்து வருகின்றனர். இங்கு ஏ,பி,சி,டி,இ பிளாக்குகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏ பிளாக்கில் உயர் அலுவலர்கள் குடியிருப்பதால் தேவையான வசதிகளை சம்பந்தப்பட்ட துறையினரால் செய்யப்படுகிறது. அடுத்த நிலையில் உள்ள ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புகளின் நிலைதான் பரிதாபம். சி பிளாக் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடலாம் என்ற நிலையில் உள்ளன. இ பிளாக்கில் உள்ள வீடுகள் மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால் இந்த குடியிருப்பில் இருந்த பெரும்பாலானோர் காலி செய்து விட்டனர்.

இதனால் வீடுகளும், அதனை சுற்றியும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. பி பிளாக்கில் உள்ள குடியிருப்புகளில் பல கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் இதில் சில வீடுகளில் மட்டும் வசித்து வருகின்றனர். குடியிருப்பை சுற்றிலும் புதர்களாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளது. இந்த குடியிருப்புகளை சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதால் பாம்புகள், பூச்சிகளுக்கு பஞ்சமில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ள இந்த வீடுகளில் கடும் அச்சத்துடனேயே ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பராமரிக்க முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ள குடியிருப்புகளுக்கு பதில் புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு ஊழியர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே வீடுகளுக்குள் வசித்து வருகிறோம். குடியிருப்புகள் கட்டப்பட்டு 30ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவைகள் பராமரிப்பு செய்யும் நிலையில் இல்லை. எனவே இந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : homes , Lack of maintenance We live in homes with fear every day
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை