×

ராஜபாளையம் அருகே துப்பாக்கி வீரன் சிற்பத்துடன் கூடிய நடுகற்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த துப்பாக்கியுடன் உள்ள வீரனின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பின்புறம் மற்றும் தென்காசி சாலையில் சேத்தூர் எல்லைப்பகுதி ரோட்டோரத்தில் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான கந்தசாமி கூறியதாவது: சேத்தூர் பகுதியில் களஆய்வில் ஈடுபட்டிருந்தபோது 2 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் நடுகல்லில் வீரன் நின்ற நிலையில், தனது இடது கையால் தரையில் ஊன்றிய நிலையில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பிடித்தபடியும், வலது கையை கீழே தொங்க விட்ட நிலையிலும் சிற்பம் அமைந்துள்ளது. மார்பின் இடைப்பகுதியில் உள்ள கயிற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பை உள்ளது.


வீரனின் தலைக்கொண்டை அலங்காரத்துடனும், இரண்டு நீண்ட காதணிகள் அணிந்துள்ள நிலையில், கைத்தண்டை, கைக்காப்பு, காற்சிலம்பு போன்றவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவின்போது, இந்த நடுகல்லை மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு சிறப்பு பூஜையும் செய்கின்றனர். நடுகல் அமைவிடம் முன்பு சிமென்ட் கற்களைக் கொண்டு தரைத்தளமும், விளக்கு ஏற்றுவதற்கு ஒரு சிறு கூடாரமும் அமைத்துள்ளனர்.

சேத்தூர் எல்லையில் காமராஜர் நகர் அருகே உள்ள நடுகல்லில், வீரன் நின்றவாறு நாட்டுத்துப்பாக்கியை இடுப்புக் கயிற்றில் கட்டிய நிலையிலும், இடது கையால் சற்று உயர தூக்கி பிடித்துக் கொண்டவாறும் சிற்பம் அமைந்துள்ளது. இக்கல்லை கருப்பசாமி என்ற பெயரில் குலதெய்வ வழிபாடாக சிவகாசி, விருதுநகர், தேனி மற்றும் போடி பகுதிகளிலிருந்து மக்கள் வழிபாடு செய்கின்றனர். இதிலும் வீரனின் முகம் சிதைந்து காணப்படுகின்றது.


இரண்டு நடுகற்களிலும் வீரன் நாட்டுத்துப்பாக்கியுடன் காணப்படுவதால் விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை காப்பதற்காகவும், காட்டு விலங்குகளை வேட்டையாடி வீரம் புரிந்த நிகழ்வுகளை இந்நடுகல் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இவை கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : gunman ,Rajapalayam Rajapalayam , Discovery of sculptures with gunman found near Rajapalayam
× RELATED தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலீஸ்!