×

கொரானா வைரஸ் எதிரொலி: புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தை நிறுத்தியது நேபாள அரசு!

காத்மாண்டு: கொரோனா தொற்று பீதியை தொடர்ந்து புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ், மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆபத்தான தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அவ்வகையில் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் தொடர்பான அனைத்து பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மலையேற்ற வீரர்களுக்கான அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டதையடுத்து எவரெஸ்ட் சிகரம் மூடப்பட்டுள்ளது. அனைத்து மலைச்சிகரங்களுக்குமான மலையேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் உலகளாவிய சூழ்நிலையை ஆராய்ந்து இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்ட, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு நேபாளம் மற்றும் சீனா வழியாக செல்ல முடியும். கொரோனா வைரஸ் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான அனுமதிகளை சீனா ஏற்கனவே ரத்து செய்துள்ள நிலையில், நேபாளமும் இப்போது அனுமதிகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Corona ,Nepal ,government ,Mount Everest ,climbers , Corona virus, Nepal, Mount Everest, mountain climbing
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்