×

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் தேக்கம்

அரியலூர்: உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் முடங்கி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முழுமையான விளக்கம் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் கோழி மாமிசத்தால் வைரஸ் பரவுவதாக எழும்பி உள்ள தகவலை தொடர்ந்து கோழி இறைச்சி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுமார் 175 கோழிப் பண்ணைகள் உள்ளன.

இந்த பண்ணைகளில் வளரும் கோழிகள் நாமக்கல் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்பொழுது கொரோனா வைரஸ் பீதியால் கொள்முதலை நிறுத்திய கோழிப்பண்ணை நிறுவனத்தினால் லட்சக்கணக்கான கோழிகள் வாழ்நாளை கடந்து பண்ணைகளில் உயிரிழந்து வருகின்றன. கோழிப்பண்ணையில் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் மத்திய மாநில அரசுகளின் மானியம் கிடைக்கும் என உத்திரவாதம் அளித்து கிராமப்புறங்களில் பண்ணைகள் அமைக்க கால்நடைதுறை அறிவித்ததை அடுத்து வங்கிகளில் கடன் பெற்று ஏராளமான பண்ணைகள் துவக்கப்பட்டன.

இதுநாள்வரை கோழிப்பண்ணை இருக்கும் பகுதிக்கு சென்று எந்தவித சுகாதார நடவடிக்கையும் மேற்கொள்ளாத கால்நடைதுறையால் பண்ணை உரிமையாளர்கள் வியாபாரத்தில் பெரும் இழப்பை சந்தித்து வந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் தற்பொழுது உள்ள 175 கோழிப்பண்ணைகளிலும் கோழிக்குஞ்சுகளை கொடுத்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யப்படாததால் கோழிகள் குறிப்பிட்ட நாளை கடந்து எடை அதிகரிப்பால் உயிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். தற்பொழுது கோடை காலம் என்பதால் நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்து துர்நாற்றம் வீசத்து வங்கி உள்ளது.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர்கள் கூறும்போது மத்திய மாநில அரசுகள் இரண்டு வகையான மானியம் வழங்கும் என்ற உத்திரவாதத்தில் வங்கிகளில் கடன்பெற்று பண்ணை அமைத்ததாகவும் மத்திய அரசின் மானியம் இதுநாள்வரை வழங்கப்படாததால் வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது கொரானா வைரஸ் பீதியால் மேலும் இந்த தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். கோழப்பண்ணை நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோழிக்குஞ்சுகள் மற்றும் அதற்கான தீவனங்களை கொடுத்து மிக குறைந்த விலையில் கிலோ 3ரூபாய் 50 பைசாவிற்கு கொள்முதல் செய்து வந்தன. தற்பொழு அந்த தொகையும் கொடுக்க முன்வரவில்லை.

வங்கியில் இதனை நம்பி வாங்கிய கடன்தொகையையும் கட்டமுடியாமல் தவித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழப்பண்ணை அமைந்துள்ள இடங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததினால் அதிக துர்நாற்றத்தால் குடியிருப்பு பகுதிகளில் இருப்போர் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கோழி பண்ணை பகுதிகளை ஆய்வு செய்து நோய்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும், வளர்க்கப்பட்ட கோழிகளை பரிசோதித்து கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பண்ணைகளுக்கு காப்பீடு அனுமதித்து இதுபோன்ற வியாபார இழப்பு காலங்களில் உரிய இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Tags : corona virus echo echo farms ,farm , Coronavirus virus impact echo Thousands of chickens on the farm
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி