×

நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி பயிர்களில் விளைச்சலை கூட்டி லாபத்தை பெருக்கிட நுண்ணூட்ட கலவை பயன்படுத்தலாம்

மன்னார்குடி: நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி பயிர்களில் விளைச்சலை கூட்டி லாபத்தை பெருக்கிட நுண்ணூட்டக் கலவையை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோட்டூர் வட்டாரத்தில் நெல், உளுந்து, நிலக்கடலை, தென்னை மற்றும் பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன.


அனைத்து பயிர்களுக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை போலவே முக்கியமான ஏழு நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், போரான் மற்றும் மாலிப்டினம் ஆகியவற்றின் பங்கும் அத்தியாவசியமானது. ஆகவே, வேளாண்மைத்துறையின் மூலம் ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனியே நுண்ணூட்டச் சத்துகள் அடங்கிய நுண்ணூட்டக் கலவையினை தயார் செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


நெல் பயிருக்கு ஏக்கருக்கு 5 கிலோ வீதம் நெல் நுண்ணூட்டக் கலவையினை 20 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்த ஒரு வாரத்தில் மேலாக இடலாம். இவ்வாறு இடும் பொழுது, பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து பயிர் நன்கு செழிப்பாக வளர்ந்து, நல்ல விளைச்சலை பெறுவதற்கு வழிவகை செய்யும். அதே போல், உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறுவகை பயிர்களுக் கான பயறு நுண்ணூட்டக் கலவையினை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் அடியுர மாக இடலாம்.


இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து, பூக்கள் உதிர்வது குறை ந்து, அதிக அளவில் காய்கள் பிடித்து நல்ல மகசூலினை பெற முடியும். நிலக்கடலை பயிருக்கும் தனியாக தயாரிக்கப்பட்டுள்ள நிலக்கடலை நுண் ணூட்டத்தினை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மேலாக தூவ வேண்டும். இதனால் பயிர்கள் நன்கு செழுமையாக வளர்ந்து, பூக்கள் உதிர்வது குறைந்து, அனைத்து பூக்களும் விழுதுகளாக இறங்கி, பொக்கு கடலைகள் இல்லாமல் நல்ல மகசூலினை அடையலாம்.


அதுபோல, பருத்தி பயிருக்கென இருக்கக்கூடிய பருத்தி நுண்ணூட்டத்தினை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராக தூவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டினால் வரக்கூடிய சரியான வளர்ச்சியற்ற தன்மை, சிகப்பு இலை நோய் மற்றும் சப் பைக் கொட்டுதல் ஆகியவற்றிலிருந்து பருத்தி பயிரினை காத்து மகசூல் இழப்பை தவிர்த்து நல்ல லாபத்தை பெறலாம். இது தவிர, தென்னை மரத்தில் ஏற்படக்கூடிய பூ உதிர்தல், குறும்பை கொட்டுதல், புதிய பாளைகள் உருவாகாமை, ஒல்லிக்காய் போன்ற பிரச்சனை களுக்கு ஊட்டச்சத்து குறைபாடே காரணம்.


எனவே, தென்னை நுண்ணூட்டக் கலவையினை ஒரு மரத்துக்கு ஒரு கிலோ வீதம் 3 ஆண்டுகளுக்கு தொடர் ந்து இட வேண்டும். மரத்தின் அடியிலிருந்து 5 அடி தொலைவுக்கு பாத்தி அமைத்து மண்ணை கொத்திவிட்டு, தென்னை நுண்ணூட்டத்தினை பாத்தி முழுவதும் தூவி கிளறிவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குனர் தங்க பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.



Tags : In paddy, onion, groundnut and cotton crops Multiply yields and multiply profits The microcosmic mixture can be used
× RELATED பல ஆண்டுகளாக மின்கட்டணம் பாக்கி;...