×

உன்னாவ் பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பான வழக்கில் குல்தீப் செங்காருக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறை!

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு தன்னிடம் வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை முன்னாள் பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். செங்கார், உன்னாவ் மாவட்டத்தின் பங்கார்மாவ் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

இதனால், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, மாமா மீது கொலை, திருட்டு என 28 வழக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், செங்காரின் ஆதரவாளர்கள் கொடுத்த பொய்யான புகாரில் பெண்ணின் தந்தையை போலீசார் கடந்த 2018ல் கைது செய்தனர். போலீசாரின் நடவடிக்கையால் விரக்தியடைந்த இளம்பெண் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்பாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அடுத்த நாளே அவரது தந்தை போலீஸ் கஸ்டடியில் மர்மமான முறையில் இறந்தார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் செங்கார் மற்றும் 7 பேர் குற்றவாளி என்று தீர்ப்பளித்து. இந்த நிலையில், அதன் தண்டனை விவரங்களை அறிவிக்கும் விசாரணையானது நிறைவுபெற்ற நிலையில், நீதிமன்றம் தண்டனை விவரங்களை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பான குல்தீப் சிங் செங்காருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் குல்தீப், அவரது சகோதரர், இரண்டு காவலர்கள் உட்பட ஆறு பேருக்கு இந்த சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கார் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்கர் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உன்னாவ் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி செங்கார் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Unnav ,death ,jail ,prison ,Kuldeep Sengar , Unnao, rape case, father, Kuldeep Sengar, jail, BJP
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...