×

சங்கரன்கோவிலில் இடிந்து விழும் அபாய நிலையில் பொது மயானம்

சங்கரன்கோவில்:  சங்கரன்கோவிலில் சிதிலமடைந்து காணப்படும் பொது சுடுகாடு, எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில், சங்கரன்கோவில் முதல்நிலை நகராட்சி ஆகும். இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் சாலையில், மக்கள் பயன்பாட்டிற்கான பொது மயானம் உள்ளது. இந்த மயானம் அமைந்துள்ள இடம், பல ஆண்டுகளுக்கு முன் தனிநபரால் மயான பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் 3 சடலங்கள் வரை எரியூட்டும் வகையில் கட்டப்பட்டு உள்ள இந்த மயான கட்டிடம், தற்போது முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேற்கூரையை தாங்கி நிற்கும் தூண்கள் அனைத்தும் அரிக்கப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன. நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்கப்படாததால், இறந்தவர்களின் உடலை எரியூட்ட வருபவர்கள், முறையாக இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக இறுதி கடன்களை முடித்துவிட்டு குளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி, காட்சி பொருளாக மாறியுள்ளது. மோட்டார், மின்வசதி இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உடலை எரியூட்ட வரும் மக்களே, தனியார் வாகனங்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி வந்து பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் 3 உடல்களை எரியூட்டும் வசதியுள்ள சுடுகாட்டில் அதற்கான அடிப்படை வசதிகள் இல்ைல. ஒரு மனிதன் வாழ்நாளில் இன்பம், துன்பம் என பல தரப்பட்ட பிரச்னைகளை சந்தித்து பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்து இறந்த பிறகு செல்லும் மயானம் கூட பராமரிப்பின்றியும், பாதுகாப்பில்லாமலும் இருப்பது அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சங்கரன்கோவில் பொதுமயானத்தில் பராமரிப்பு பணிகளை செய்வதுடன் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்மயானம் அமைக்கப்படுமா?
மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமானது சங்கரன்கோவில். தற்போது நகரில் மக்கள் தொகை பெருகி விட்ட நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மயானம் அவசியமானதாகிறது. போதிய இடவசதியில்லாததால் மின்மயானம் அமைக்கப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நகர எல்லையில் தேவையான இடத்தை கையகப்படுத்தி மின்மயானம் அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : funeral ,Sankarankoil ,Public Cemetery , In cankarankovil Public amnesia in danger of collapsing
× RELATED சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில்...