×

ஏலச்சீட்டு நடத்தி மோசடி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

விருத்தாசலம்: ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜ்குமார். இவரது தாய் இந்திரா காந்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கதிரவன், அவரது மனைவி செல்வநாயகி, தனலட்சுமி, ஞானவடிவு மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் குழுக்கள் திட்டம் என்ற முறையில் பல கோடி வசூல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளிக்க விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது சப்-கலெக்டர் இல்லாததால், அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.  

அப்போது பொதுமக்கள் கூறியதாவது: தங்கள் பகுதிகளில் அம்பாள் சிட்பண்ட்ஸ், இமயம் லேண்ட் புரமோட்டார்ஸ், விஜே லேண்ட் புரமோட்டார்ஸ் மற்றும் குபேரன் குழுக்கள் திட்டம் என்ற பெயரில் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட தரகர்களை வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் சீட்டு கம்பெனி நடத்தினர். அதில் மாதம் 999 ரூபாய் கட்டி ஒவ்வொரு மாதமும் குலுக்கல் நடைபெறும். அப்போது குலுக்கலில் தேர்வு பெறும் நபர்களுக்கு 3 சென்ட் இடம் அல்லது இரு சக்கர வாகனம் வழங்கப்படும். அவ்வாறு குலுக்கலில் தேர்வு பெறாத நபர்களுக்கு 50 மாதம் முடிவடையும் போது கட்டாயமாக 3 சென்ட் இடம் வழங்கப்படும் என விதிமுறைகள் வைத்து பணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் எந்த ஒரு மாதமும் எந்த குலுக்கலும் நடைபெறவில்லை. யாருக்கும் மனைப்பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் 50 மாதங்கள் முடிவடைந்தும் எதுவும் வழங்காமல் இருந்து வந்தனர்.

இது குறித்து இதனை நடத்தி வந்தவர்களிடம் பலமுறை கேட்கும்போது அவர்கள் எந்தவித சரியான பதிலும் கூறாமல் கடந்த மூன்று வருடமாக அலைக்கழித்து வந்தனர். மேலும் மற்றொரு திட்டத்தில் 100, 200 ரூபாய் என தினமும் வசூலிக்கப்பட்டு மொத்த தொகை வரும்போது அவர்களுக்கு மொத்தமாக 3 செண்ட் இடம் வழங்கப்படும் எனவும் அறிவித்து அதன்படி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து ஏமாற்றியுள்ளனர்.
இந்த அடிப்படையில் ஒவ்வொரு திட்டத்திலும் மூன்றாயிரம் பேர் வீதம் மூன்று திட்டங்களிலும் ஆயிரக்கணக்கான நபர்கள் தங்கள் பணத்தை கட்டி வந்துள்ளனர். பணம் வசூலித்து அதற்கான அட்டைகள் வழங்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். ஆனால் 2017ல் இந்த திட்டம் முடிவடைந்தும், இதுவரை எதுவும் வழங்கவில்லை.

இது குறித்து கடந்த ஓரிரு வருடமாக அனைத்து தரப்பு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் எங்களது பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்த நிலையில் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் நிற்கதியாய் இருந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த நேர்முக உதவியாளர், அவர்களிடம் மனுக்களை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இருப்பினும் தங்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் நடவடிக்கைகளை வெளியுலகுக்கு தெரியுமாறு விளம்பரம் செய்ய வேண்டும். அல்லது கம்பெனிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை திரும்பப் பெற்று தரவேண்டும். இல்லையெனில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Siege ,Office Office ,Sub-Collector ,Fraudulent Sub-Collector's ,Bidding Fraud Public Sudden Siege , Bidding fraud Public Sudden Siege of Sub-Collector's Office
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு...