×

சுருக்குமடி வலை சோதனைக்கு எதிர்ப்பு மீனவ பெண்கள் தீக்குளிக்க முயற்சி

கீழ்வேளூர்: நாகை அருகே சுருக்குமடி வலை இருக்கிறதா? என சோதனை செய்ய மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த 10ம் தேதி வெள்ளப்பள்ளம் கடலோர பகுதியில் நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் இரண்டு விசைப்படகில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் நடுகடலுக்கு சென்று, சுருக்குமடி வலையை பயன்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தகராறு ஏற்பட்டது. இதில் கீச்சாங்குப்பம் மீனவர்கள் சோடா பாட்டில் மற்றும் கல்வீசி தாக்கினர். இதில் காயமடைந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய நாகை கலெக்டர் உத்தர விட்டார். அதன் பேரில் மீன்வளத்துறை இணை இயக்குநர் அமுல்சேவியர், நாகை கோட்டாட்சியர் பழனிகுமார், டி.எஸ்.பி. முருகவேல், வட்டாட்சியர் பிரான்சிஸ், கடலோர காவல் படையை சேர்ந்த ராஜா,ராஜகோபால், நாகை டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் மீன்பிடி சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய நாகை அடுத்த கீச்சாங்குப்பத்தில் மீன் இறங்கும் தளத்திற்கு நேற்று காலை சென்றனர்.

இதையறிந்த மீனவர்கள் நாங்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்துவது இல்லை. முதலில் இரட்டைமடி சுருக்கு வலையையும், அதிவேக இன்ஜின் பொருத்திய படகுகளையும் தடைசெய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 25 மீனவபெண்கள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்தனர். அவர்கள் முதலில் இரட்டைமடி சுருக்கு வலையையும், அதிக வேக இஞ்சின் பொருத்திய படகுகளையும் தடை செய்யுங்கள். எங்கள் கிராமத்தில் சுருக்குமடி வலை இருக்கிறதா என்று சோதனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திடீரென 10 பெண்கள் கேன்களில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே போலீசாரும், மீனவர்களும் அவர்களை தடுத்து நிறுத்தி மண்ெணண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது 500மீனவர்கள் அவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்தில் உள்ள துறைமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து நாகை கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் அக்கரப்பேட்டை மீன் இறங்கும் தளத்தில் உள்ள துறைமுக அலுவலகத்தில் அதிகாரிகள், மீனவ பஞ்சாயத்தார்கள் கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றது. மீன்வளத்துறை இணை இயக்குநர் அமுல்சேவியர், டி.எஸ்.பி. முருகவேல், வட்டாட்சியர் பிரான்சிஸ் மற்றும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை இனி பயன்படுத்த மாட்டோம். தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்திய இரு படகுகளை இனி தடை செய்யப்பட்ட மீன்பிடித் தொழிலுக்கு பன்படுத்த மாட்டோம். தடை செய்யப்பட்ட இரு சுருக்குமடி வலைகளை அரசால் அனுமதிக்கப்பட்ட வலைகளாக உடனே மாற்றப்படும். இது தொடர்பாக மீனவர்களிடையே மாவட்ட அளவிலான கூட்டம் நடத்தி தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி இது பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு வார காலத்திற்குள் அளிக்கப்படும் என்றும் சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

Tags : Resistance fishermen ,women ,Fishermen , Resist the abbreviation web test Fishermen try to fire women
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...