×

பாலக்காட்டில் இறைச்சி விற்பனை பாதிப்பு கறிக்கோழி விலை கிலோ ரூ.28 ஆக சரிவு

பாலக்காடு: கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் மற்றும் குரங்கு காய்ச்சல் என அடுத்தடுத்து நோய் பரவி வருவதால் இறைச்சி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் மருத்துவமனைகளிலும் பலர் வீடுகளை விட்டு வெளியேறாத வகையிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பறவை காய்ச்சலும் பரவியதால் நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்துள்ளன. இது தவிர வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதாக பீதி நிலவுகிறது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக இறைச்சி உணவுகளை தவிர்த்து வருகின்றனர். பறவை காய்ச்சல் எதிரொலியாக கறிக்கோழி விற்பனை மாநிலம் முழுவதும் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.150 வரை விற்பனையான கறிக்கோழி நேற்று கிலோ ரூ.28 ஆக சரிந்தது. கோழி இறைச்சி வாங்க யாரும் முன்வராததால் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மட்டன் கிலோ ரூ.600க்கும், மாட்டிறைச்சி கிலோ ரூ.320க்கும் விலை குறைக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஆயினும் அசைவ பிரியர்கள் இறைச்சி உண்பதை குறைத்துள்ளனர். இதனால் உணவகம், ஓட்டல்களில் கூட மட்டன், பீப் பிரியாணி விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக சிக்கன் பிரியாணி, சிக்கன் சில்லி, பெப்பர் சிக்கன், சிக்கன் 65 போன்றவற்றை சமைப்பதே இல்லை.

திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு கறிக்கோழி வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வரத்து குறைந்த நிலையில், விலையும் சரிவடைந்துள்ளதால் கறிக்கோழி விற்பனையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு அதிகம் வெளியே செல்வதில்லை. இதனால் வழக்கமான வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளது.


Tags : Palakkad , Meat sales in Palakkad fell by 28 per cent to Rs
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது