×

சட்டப்பேரவை துளிகள்

நியாய விலைக்கடைகளில் 3 நாட்கள்தான் உணவு பொருட்கள் விநியோகம்: திமுக குற்றச்சாட்டு: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவிடைமருதூர் தொகுதி கோவி.செழியன் (திமுக) பேசுகையில், ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 70 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. 100 சதவீதத்தில் 90 சதவீதமாவது உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் 3 நாட்கள்தான் உணவு பொருள் வழங்கப்படுகிறது. இதை மாற்றி, குறைந்தபட்சம் 15 நாட்களாவது உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், “ உணவு பொருட்கள் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்.

உணவு பொருட்கள் வழங்கவில்லை என்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு உணவு பொருட்கள் ஸ்மார்ட் கார்டுகள் மூலம்தான் வழங்கப்படுகிறது. உணவு பொருட்கள் வாங்கினால் அவருக்கு மெசேஜ் வரும். அனைவருக்கும் உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்” என்றார்.

மீனை தைரியமாக சாப்பிடுங்கள் 100 ஆண்டு வாழலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு: சட்டப்பேரவையில் செய்யூர் ஆர்.டி.அரசு (திமுக) பேசுகையில், “இப்போது விற்கப்படுகின்ற மீன்களுக்கு எல்லாம் அமிலம் பயன்படுத்தி விற்கப்படுவதாக ஒரு தகவல் வருகிறது. அதனை அரசு கூர்ந்து கவனித்து அதன் மீது நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில், “ஒரு வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள். எல்லா அளவிலும் சுகாதாரத்துறையும், உணவுத்துறையும், மீன்வளத்துறையுடன் இணைந்து எங்கெல்லாம் கடைசி கட்ட விற்பனையில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சோதனை செய்த போது தரமான மீன்களை தான் கொடுக்கிறார்கள். அதனால், வீண் வதந்தியை கண்டிப்பாக நம்ப தேவையில்லை.

மதுரையில்தான் வெளிமாநிலங்களில் இருந்து வருகிற மீன்கள், போக்குவரத்தில் வருவதால் 2, 3 நாட்கள் ஆகிறது. அதனால் அது கெட்டு போகின்ற நிலை இருப்பதால்தான் பறிமுதல் செய்து அதை மார்க்கெட்டில் விற்காத அளவில் அரசு நடவடிக்கை எடுத்தது. எந்த அமிலமும் கிடையாது. மீனை தைரியமாக சாப்பிடுங்கள். மீனை சாப்பிட்டால் கண்டிப்பாக 100 வருடம் நீண்ட ஆயுளோடு வாழலாம்” என்றார்.

சிறப்பு அந்தஸ்து பெற்ற அண்ணா பல்கலையாக செயல்பட்டாலும் 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்: சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் விளவங்கோடு விஜயதரணி (காங்கிரஸ்) பேசியதாவது: அண்ணா பல்கலைக்கு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் என்கிற அந்தஸ்து மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 69 சதவீத மாணவர் சேர்க்கை, பேராசிரியர் நியமனம் பாதிக்கக்கூடாது. அண்ணாவின் பெயரையும் மாற்றக்கூடாது. அதே நேரத்தில் ஐஓஇ அந்தஸ்து மூலம் மத்திய அரசின் நிதியை சுலபமாக பெற முடியும். அதையும் நாம் விட்டு விடக்கூடாது.  நவோதயா பள்ளிகளை ஏன் தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்: அண்ணா பல்கலை, சீர்மிகு பல்கலை என்று 2 ஆக பிரிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சாதகம், பாதகம் பற்றி  ஆய்வு செய்வார்கள். எந்த நேரத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன். அரசு கல்லூரிகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதன்பிறகு 2 சுழற்சி முறையில் செயல்படும் கல்லூரிகள் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் மாற்றப்படுகிறது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை கல்லூரி இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Lawyer ,DMK , Assembly, DMK
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி