×

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 14 நாடுகளின் பயணிகள் கண்காணிப்பு: தாம்பரம், மதுரையில் தனி மருத்துவமனை

சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான தடுப்பு உத்திகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, லங்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தூதரக அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும்  துணை தூதரக அதிகாரிகளுக்கு உள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.  

இதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.  மாநில எல்லைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மற்றும் சென்னை தாம்பரம் பகுதிகளில் இதற்கென தனி மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட அந்த 14 நாடுகளில் இருந்த வந்தவர்கள் அவர்களுக்கு தொடர்புடையவர்கள் என 8 பேரை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோய்க்கான வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதை தமிழக அரசு கண்காணித்து வருகிறது.  உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அந்த 14 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தாலும் இல்லையென்றாலும் தனிமைப்படுத்தபட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் தங்களுடன் குடும்பத்தாரை அழைத்துச் செல்ல விசா அனுமதிக்கப்படுமா என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கலந்தாலோசித்து பதிலளிக்கப்படும் என்றார்



Tags : Hospital ,Travelers ,countries ,Madurai Travelers ,Madurai , Coronavirus, Tambaram, Madurai, Hospital
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...