×

உபி.யில் வன்முறையாளர்கள் புகைப்பட பேனர் விவகாரம்; ஐகோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களின் புகைப்படத்துடன் கூடிய பேனரை அகற்றக்கோரிய விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது நடந்த வன்முறையில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதற்காக நஷ்டஈடு, வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என உபி  முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இதையடுத்து, வன்முறையில் ஈடபட்ட 53 பேரின் பெயர், புகைப்படங்கள் அடங்கிய  பேனர்களை நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வைத்தனர். இதில், கடந்த வாரம் வியாழக்கிழமை வைக்கப்பட்ட அந்த பேனரில், பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக நஷ்டஈடு வழங்காவிடில் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எழுதப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேனர் விவகாரத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது.  அப்போது, இதுபோன்று பேனர் வைப்பது என்பது தனிநபரின் உரிமையை பறிப்பது மட்டுமில்லாமல், குடிமக்களை அவமதிக்கும் செயலாகும்.

அதனால் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்தது. மேலும், இது குறித்து லக்னோ போலீஸ் கமிஷ்னர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என கடந்த 9ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உபி அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு, விடுமுறைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் யு.யு.லலித், அனிருத்தா போஸ் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களை துப்பாக்கி வைத்து மிரட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அதனால், இதை தனிநபர் சுதந்திரம் என்று கண்டிப்பாக கூற முடியாது,” என்றார்.

அப்போது குறுகிட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் உத்சரப்பிரதேச அரசின் நோக்கம் என்ன என்பதை புரிந்து கொண்டோம். வன்முறையின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூலிக்க அம்மாநில அரசு வழங்கிய அவகாசம் முடிந்து விட்டதா?’’ என்று கேட்டனர். அதற்கு, சொலிசிட்டர் துஷார் மேத்தா இல்லை என பதிலளித்தார். எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி செய்த வாதத்தில், “மிகவும் கொடுமையான குற்ற வழக்குகளில் கூட இதுபோன்று பேனர் வைக்கப்படுவதில்லை. குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி தலைமறைவாக இருக்கும் நபரை கூட இப்படி நமது நாட்டில் கொடுமை படுத்தியது கிடையாது.

அப்படி இருக்கையில் எதன் அடிப்படையில் போராட்டக்காரர்களின் தனிப்பட்ட விவரம் அடங்கிய பேனர்களை வைத்தனர்?” என கேட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி அமைப்பதாக உத்தரவிட்டனர். மேலும், பேனர்களை அகற்றும்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கும் நீதிபதிகள் தடை விதிக்கவில்லை.

Tags : Supreme Court ,UP ,Violent ,Judges Sessions , Violence in UP, Icort, Prohibition, Supreme Court, Denial
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...