×

மத்திய பிரதேச அரசியல் திருப்பம்; மகாராஷ்டிரா அரசை அசைக்க முடியாது: சிவசேனா கருத்து

மும்பை: மத்தியப் பிரதேச மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பங்கள் நடந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வலுவாகவும் அசைக்க முடியாத நிலையிலும் இருப்பதாக சிவசேனா கூறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரசில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா 22 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகினார். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிந்தியா நேற்று முன்தினம் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

காங்கிரஸ் கட்சி இளைய தலைமுறை தலைவர்களையும் அவர்களுடைய புதிய சிந்தனைகளையும் ஏற்க மறுப்பதாக ஜோதிராதித்யா சிந்தியா குற்றம்சாட்டியுள்ளார். பாஜ.வில் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச அரசியல் குறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி தனது இளைய தலைவர்களின் விருப்பங்களை அலட்சியப்படுத்துவது சரியல்ல.

கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் மத்தியப் பிரதேச காங்கிரசில் உயர்மட்டத்தில் இருந்தாலும் சிந்தியா போன்ற தலைவர்களை முற்றிலுமாக ஓரம்கட்டுவது தேவையற்றது ஆகும். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசு வலுவாகவும் அசைக்க முடியாத நிலையிலும் இருக்கிறது. இங்கு ஒரு ஈ, எறும்புகூட வெளியே செல்லாது. உள்ளேயும் வராது. எட்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டபோது அதை ஒரு ஜனநாயக படுகொலை என்று ஜோதிராதித்யா சிந்தியா கூறினார்.

வெறுப்பு பேச்சுக்களை பேசுவதற்காக பதினைந்து நாட்களுக்கு முன்புதான் பாஜ தலைவர்களை ஜோதிராதித்யா சிந்தியா கடுமையாக தாக்கிப் பேசினார். ஆனால் இப்போது அவர் பாஜ.வில் சேர்ந்துள்ளார். ஜோதிராதித்யா சிந்தியாவின் கோரிக்கைகள்தான் என்ன? மாநில காங்கிரஸ் தலைவர் பதவியா அல்லது மாநிலங்களவைக்கான தேர்தல் டிக்கெட்டா? இரண்டுமே அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பதவி கொடுக்கப்பட்டிருந்தால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அரசியல் திருப்பம் ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Shiv Sena ,government ,Maharashtra ,Madhya Pradesh , Shiv Sena, Maharashtra
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை