×

கொரோனா கார்னர்

சீனாவில் உண்டாகி உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ். அந்த வைரஸ் பீதியால் சுற்றுலா, ஆன்மீக பயணங்கள் உள்ளிட்ட போக்குவரத்தும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் விளையாட்டு போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் போட்டிகள் நடந்த செய்திகளை விட கொரோனாவால் போட்டிகள் நிறுத்தப்பட்ட செய்திகள்தான் அதிகம் வரத் தொடங்கியுள்ளன.

பாதுகாப்பா வாங்க... ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை-கொல்கத்தா மோதும் இறுதிப் போட்டி கோவாவில் நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை காண வரும் தங்கள் ரசிகர்கள்  முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை சென்னையின் எப்சி அள்ளிவிட்டுள்ளது.

யாருக்கும் அனுமதியில்லை: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘சாலை பாதுகாப்பு உலகத் தொடர்(ஆர்எஸ்டபிள்யூஎஸ்) என்ற பெயரில் டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. நவிமும்பை, பூனே நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா, தெ.ஆப்ரிக்கா என 5 நாடுகள் விளையாடுகின்றன. சச்சின், லாரா, பிரட் லீ உட்பட முன்னாள் வீரர்கள் களம் கண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் பயத்தில் பூனாவுக்கு பதில் நவிமும்பையில் மட்டும் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களை அனுமதிக்காமல் போட்டியை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது: முதன்முதலில்   விளையாட்டுப் போட்டிகள் நடந்த கிரீஸ் நாட்டில் உள்ள பண்டைய ஒலிம்பியா  நகரில் நேற்று பண்டைய முறைப்படி ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. பின்னர்  இந்தச் சுடர் கிரீஸ் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்.  பல்வேறு நாடுகள் வழியாக, ஒலிம்பிக் சுடர் ஜூலை முதல் வாரத்தில் ஒலிம்பிக்  நடைபெற உள்ள ஜப்பான்  சென்றடையும். அங்கும் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு  கொண்டு செல்வார்கள். பின்னர் ஜூலை 24ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்  டோக்கியோவில் உள்ள அரங்கில் அந்தச்சுடர் ஏற்றி வைக்கப்படும். இந்த  நிகழ்ச்சியிலும், நேற்று முன்தினம் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியிலும் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

கட்டணம் திரும்ப பெறலாம்: அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில்  பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க இருந்த இந்தப் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அணி நிர்வாகம், ‘போட்டிக்கான கட்டணத்தையும் ரசிகர்கள் திரும்ப பெறலாம் என்று தெரிவித்துள்ளது. அதை விட முக்கியம் அதற்கான லிங்கிலும் www.bnpparibasopen.com/coronavirus  என்று ‘கொரோனா’ இடம் பெற்றுள்ளதுதான்.

அவசரமில்லை- உச்சநீதிமன்றம்
கொரானா அச்சுறுத்தல் காரணமாக  ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு  நேற்று  விசாரணைக்கு வந்த போது விடுமுறை கால நீதிபதிகள் யு.யு.லலித், அனிருத்தா போஸ் ஆகியோர், ‘மனுதாரர் கூறியது போல் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. ஹோலி விடுமுறை முடிந்து மார்ச் 16ம் தேதி வழக்கமான நீதிமன்றத்திலேயே மனுதாரர் முறையிடலாம்’ என்று கூறினர்.

கூட்டம் சேர்க்காதீங்க
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று, ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விளையாட்டு போட்டிகளுக்காக கூட்டம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், பிசிசிஐ உள்ளிட்ட விளையாட்டு  கூட்டமைப்புகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Corona Corner ,China , China, coronavirus
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...