×

குமரி அருகே அத்துமீறி நுழைந்ததாக கைது இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு தூத்துக்குடியில் அனுமதி மறுப்பு: ‘கொரோனா’’ வைரஸ் பீதியால் முடிவு

தூத்துக்குடி: கன்னியாகுமரி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைதான 15 இலங்கை மீனவர்களை, கொரோனா வைரஸ் பீதியால்  மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.கன்னியாகுமரி அருகே இந்திய கடலோர காவல்படையினர் அபிராஜ் என்ற கப்பலில்  நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது கன்னியாகுமரியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள், 3 இலங்கை  படகுகள் அத்துமீறி நுழைந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து 3 படகுகளையும் கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். அவற்றில் இருந்த  இலங்கையைச் சேர்ந்த   15  மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 படகுடன் நேற்று காலை 11.30 மணிக்கு  தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.  

ஆனால்  கடலோர காவல் படையினர் 3 இலங்கை படகுகளையும் அதிலிருந்த 15 இலங்கை  மீனவர்களையும் வெளித்துறைமுகம் அருகே நிறுத்தி வைத்தனர். துறைமுகத்தில் இருந்து படகு மூலம் சென்ற தூத்துக்குடி அரசு மருத்துவமனை  மருத்துவக் குழுவினர் அவர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக அவர்களை படகில் இருந்து இறங்கவோ, தூத்துக்குடி துறைமுகத்திற்குள் நுழையவோ  அனுமதிக்கவில்லை. மருத்துவ பரிசோதனை நேற்று மாலை வரை நீடித்தது. அவர்கள் 15 பேரையும் இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டாம்,  படகுகளில் வைத்திருந்து விசாரணைக்கு பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : fishermen ,border ,Sri Lankan ,Kumari , Tuticorin, Refusal, Corona
× RELATED இலங்கை சிறையிலிருந்து...