அரசியல் எதிர்காலம் குறித்த சந்தேகத்தால் கொள்கையை மறந்தார் ஜோதிராதித்யா சிந்தியா: ராகுல் பேட்டி

புதுடெல்லி: ‘அரசியல் எதிர்காலம் குறித்த சந்தேகத்தால், தனது கொள்கையை ஜோதிராதித்யா சிந்தியா மறந்து விட்டார்,’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் நேற்று அளித்த பேட்டி:ஜோதிராதித்யா சிந்தியா சொல்வதற்கும், அவர் மனதில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. சிந்தியா எனது பழைய நண்பர். அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம், சந்தேகத்தால், அவர் தனது கொள்கையை மறந்துவிட்டார். பா.ஜ கட்சியில் சிந்தியாவுக்கு மரியாதையும் கிடைக்காது, திருப்தியும் ஏற்படாது. பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மோடி அரசால் நாட்டின் பொருளாதாரம் நாசமடைந்துள்ளது. நாம் பார்த்துக் கொண்டிருப்பது சுனாமியின் ஆரம்பம்தான். நிலையை இன்னும் மோசமாக இருக்கும். பொருளாதாரம் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பொருளாதாரம் புரியவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை, கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை ஏற்கனவே தாமதமாக உள்ளது. பாதிப்பை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: