×

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் வேட்பு மனு தாக்கல்

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக போட்டியிடும்  கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  நாடு முழுவதும் 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வரும் ஏப்ரலில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நாளையுடன் மனு தாக்கல் முடிவடைகிறது. வாக்குப்பதிவு வரும் 26ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்படும்.  தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் ரங்கராஜன் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது. தமிழக சட்டசபையில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் கிடைப்பார்கள்.

 திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை வேட்பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து விட்டார். அவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில், அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிப்பதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது.  இந்நிலையில், கடந்த 9ம்தேதி அதிமுக வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான தமாகா சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.  அதிமுக வேட்பாளர்களான 3 பேரும், நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், வேலுமணி, ராஜலட்சுமி, நிலோபர் கபில் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 ஜி.கே.வாசன் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், சுரேஷ் மூப்பனார், என்டிஎஸ்.சார்லஸ், அனுராதா அபி, ஜவஹர்பாபு, ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்.பி.நாதன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், ரவிச்சந்திரன், அருண்குமார், பாலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது வேட்பாளர்களுக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இது தவிர சுயேட்சையாக பத்மராஜன் உள்ளிட்ட 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு மாநிலங்களவை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். 2 சுயேட்சைகளுக்கும் 10 எம்எல்ஏக்கள் முன்மொழியவில்லை. அதனால் வரும் 16ம் தேதி வேட்பு மனு பரிசீலனையின்போது, 2 சுயேட்சைகளின் வேட்பு மனு நிகராகரிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லாததால் திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான 18ம்தேதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

Tags : KP Munasamy ,Thambidurai ,GK Vasan ,AIADMK KP Munusamy , AIADMK , AIADMK, KP Munusamy, Thambidurai, GK Vasan ,filed nomination
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...