×

6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை நிராகரிக்க சபாநாயகருக்கு காங். அழுத்தம்: நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள கமல்நாத் கடைசி முயற்சி

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை நிராகரிக்க சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்து வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள கமல்நாத் அரசு எடுத்துள்ள கடைசி முயற்சி இது என கூறப்படுகிறது. மத்திய பிரதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்கள் ராஜினாமாக்களை சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கனவே அனுப்பினர். பெங்களூருவில் 10ம் தேதி முதல் தங்கவைக்கப்பட்டுள்ள 19 எம்எல்ஏக்கள் மற்றும் வேறு இடங்களில் உள்ள 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதில் அடங்குவர். சபாநாயகருக்கு ராஜினாமா கடிதங்கள் அனுப்பியது போல், மாநில ஆளுநருக்கும் அனுப்பப்பட்டன. பின்னர் அசல் கடிதங்கள் பாஜகவின் தூதுக்குழுவினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சி தங்களது அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை நிராகரிக்க சபாநாயகருக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 6 அமைச்சர் உட்பட 22 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்திலும் ஒரே மாதிரியான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் நேரில் சமர்ப்பிக்கவில்லை. அதனால், அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் நேற்று எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரிடம் நேரில் ஒரு மனுவை கொடுத்தனர். இதனை, மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜே.பி.தனோபியா உறுதிப்படுத்தி உள்ளார்.

மாநில காங்கிரசின் கோரிக்கையை ஏற்று, 22 பேரின் ராஜினாமாக்களை நிராகரிக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் பிரஜாபதியின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்தது போல், மத்திய பிரதேசத்திலும் கமல்நாத் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. காரணம், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் ஓட்டெடுப்பில் ஆஜராகவில்லை என்றாலும், அல்லது காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களித்தால்கூட அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படலாம். அவ்வாறு, 22 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டவுடன், தற்போதுள்ள சட்டமன்றத்தின் அல்லது சபையின் ஒரு பகுதியாக மேற்கண்ட எம்எல்ஏக்கள் இருக்க முடியாது. அதன்பின், பாஜக தலைமையில் புதிய அரசு அமைய வாய்ப்புள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடவும் வாய்ப்புள்ளது. நீண்ட இழுபறி எல்லாம் நடந்துமுடியும் வரை, காலியாக அறிவிக்கப்படும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும். அப்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டாலும், உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் மாறுபட்ட உத்தரவை வழங்கியது. அதன்படி, கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, ​​சபாநாயகர் தகுதிநீக்க உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இருந்தும், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறியது. அதன்படி, மத்திய பிரதேச சபாநாயகரால் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், கர்நாடகாவில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முறையை போன்று, மத்திய பிரதேசத்திலும் நடைபெற வாய்ப்புள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேச பேரவை சபாநாயகர்பிரஜாபதி கூறுகையில், ‘‘சட்டப்படி ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் முதலில் சபாநாயகர் முன் தனிப்பட்ட முறையில் ஆஜராக வேண்டும். அதன்பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கையை பொருத்து, சான்றுகளை மட்டுமே நான் ஆராய்வேன்” என்றார். இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் பட்டியலில் உள்ள 6 அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் கமல்நாத் ஏற்கனவே ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் குறித்து ஆளுநர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருந்தும், பேரவையில் முதல்வர் கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பலத்தை நிரூபிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags : resignation ,Speaker ,ministers ,Congress ,confidence vote ,Kamal Nath ,House , Ministers, Congress, Resignation, Kamalnath
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...