×

அம்பத்தூர் போலீஸ் மாவட்டத்தில் 15 காவல் நிலையங்களுக்கு ஒரே போக்குவரத்து பிரிவு: விபத்து குறித்து நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறல்

ஆவடி: அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, திருமுல்லைவாயல், ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், எஸ்.ஆர்.எம்.சி., திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு, நசரத்பேட்டை, குன்றத்தூர் ஆகிய 15 காவல் நிலையங்கள் உள்ளன. புறநகராக இருந்த போது, மேற்கண்ட காவல் நிலைய பகுதிகளில் எந்த இடத்தில் விபத்து நடந்தாலும், அந்தந்த காவல் நிலைய போலீசார்தான் விசாரணை நடத்தி வந்தனர். விபத்து நடந்தால் போலீசார் உடனடியாக வந்து விடுவார்கள். இது அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருந்தது. தற்போது மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைந்த பிறகு, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் எங்கு விபத்து நடந்தாலும், பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மட்டுமே விசாரணைக்கு வரவேண்டும்.அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் உள்ள சி.டி.எச். சாலை, ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, திருநின்றவூர்- பெரியபாளையம் சாலை, பூந்தமல்லி-மவுண்ட் சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில்தான் அதிகளவு சாலை விபத்து நடக்கின்றன.

உதாரணமாக அம்பத்தூர் அடுத்த பாடியில் சாலை விபத்து ஏற்பட்டால், அதை விசாரிப்பதற்காக 25 கி.மீ தொலைவில் பூந்தமல்லியில் இருந்து போக்குவரத்து புலனாய்வு போலீசார்தான் வரவேண்டும். நெரிசலை கடந்து வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விடுகிறது. விசாரணைக்கானவர்கள் காத்திருக்க வேண்டும். சென்னை மாநகரத்தில் ஒரு உதவி கமிஷனருக்கு கீழ் இயங்கும் 3 அல்லது 4 காவல் நிலையத்திற்கு ஒரு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளது. அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், எஸ்.ஆர்.எம்.சி, பூந்தமல்லி ஆகிய உதவி கமிஷனர்களின் கீழ், 5 போக்குவரத்து புலனாய்வு பிரிவுகளை அமைக்க வேண்டும். அப்படி செய்தால் விபத்து நடக்கும் இடத்திற்கு உடனடியாக போலீசார் வந்து அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும் அல்லது குறைந்தபட்சம் ஆவடி, அம்பத்தூர் பகுதிகளிலாவது கூடுதலாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும். எனவே போலீஸ் உயரதிகாரிகள், ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் போக்குவரத்து புலனாய்வு பிரிவை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : police stations ,police district ,Ambattur ,accident , Ambattur, Police District, Transport Division, Accident
× RELATED சென்னையில் காவல் நிலையங்களில்...