×

போடி வனப்பகுதியில் தீ வைக்கும் கும்பல்: வனத்துறை முகாம்

தேனி: போடி வனப்பகுதியில் மீண்டும், மீண்டும் தீ வைக்கும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் இருந்து பெரியகுளம் வனப்பகுதி வரை உள்ள வனநிலங்களில் ஒரு கும்பல் தீ வைத்து, மரங்களை எரித்து கரித்துண்டுகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரிந்த தீயை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு துறை, வனத்துறை, கிராம வனக்குழு உறுப்பினர்கள் அணைத்தனர். தீயணைக்கும் பணிகளை முடித்து விட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இவர்கள் ஊருக்கு திரும்பினர். இந்நிலையில், நேற்று பகலில் மீண்டும் தீ பற்றி எரிய தொடங்கியது. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு மீண்டும் ஒரு கும்பல் இங்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது.

எனவே மீண்டும் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர், வனக்குழு உறுப்பினர்கள் வனப்பகுதிக்கு சென்று தீ அணைக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இவர்களுடன் நக்சலைட் தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தீ அணைக்க தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘போடி வனப்பகுதியில் அதிகளவு வனவளம் உள்ளது. காட்டுத்தீயினால் வனவளம் அழிக்கப்படுகிறது. தீ வைக்கும் கும்பல் தீ பிடித்து எரிந்த இடங்களில் உள்ள கரித்துண்டுகளை சேகரித்து கேரளாவிற்குள் விற்பனைக்கு எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. எனவே வனத்துறையினர் கிராமங்களில் தங்கி இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து  கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்’ என்றனர்.


Tags : Fire Brigade ,Bodi Forest: Forest Department Camp ,Bodi Forest in Fire Brigade: Forest Department Camp , Bodi, Forest, Forest Department
× RELATED குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன