டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்திய வீரர்கள் 9 பேர் தகுதி

அம்மான்: ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்த ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை பிளே-ஆப் சுற்றில் 63 கிலோ எடைப்பிரிவில், ஆஸி. வீரர் கேரிசன் கார்சைடை இந்திய வீரர் மனிஷ் கவுசிக் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஒலிம்பிக் குத்துச்சண்டையில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் 9 பேர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மானில் ஆசிய தகுதி சுற்று பிளே-ஆப் பிரிவின் கடைசி சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்ைத சேர்ந்த மனிஷ் கவுசிக்கும், ஆஸ்திரேலிய வீரர் கேரிசன் கார்சைடும் மோதினர். கடந்த 2018ம் ஆண்டு காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் ஏற்கனவே இருவரும் மோதியுள்ளனர். அதில் மனிஷ் கவுசிக் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கத்துடன் நாடு திரும்பினார். இந்நிலையில் நேற்றைய போட்டி இரு நாட்டு ரசிகர்களிடையேயும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மனிஷ் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இப்போட்டியில் எளிதாக வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் மனிஷ் கவுசிக், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் அதிகபட்சமாக இந்திய வீரர்கள், வீராங்கனைகள் 8 பேர் பங்கேற்றனர். தற்போது அந்த சாதனையை முறியடித்து, 9 பேர் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்க உள்ளனர். இந்திய வீராங்கனைகள் 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம், 60 கிலோ எடைப்பிரிவில் சிம்ரன்ஜித் கவுர், 69 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா போர்கோஹைன் மற்றும் 75 கிலோ எடைப்பிரிவில் பூஜா ராணி ஆகியோர் டோக்கியோ செல்ல உள்ளனர். வீரர்கள் 52 கிலோ எடைப்பிரிவில் அமித் பன்ஹால், 63 கிலோ எடைப்பிரிவில் மனிஷ் கவுசிக், 69 கிலோ எடைப்பிரிவில் விகாஸ் கிருஷ்ணன், 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார் மற்றும் 91 கிலோ எடைப்பிரிவில் சதீஷ்குமார் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

Related Stories:

>