×

ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 12 ஆயிரம் ரன்கள்: சச்சின் சாதனையை முறியடிப்பாரா கோஹ்லி?

தர்மசாலா: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நடப்பு தொடரில் 133 ரன்களை எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 12 ஆயிரம் ரன்கள் என்ற புதிய சாதனையை விராட் கோஹ்லி எட்டுவார். தற்போது இந்த சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, 248 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 239 இன்னிங்சுகளில் அவர் 11 ஆயிரத்து 867 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவதற்கு அவருக்கு இன்னும் 133 ரன்களே தேவை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட நடப்பு தொடரில் அவர் 133 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக குறைந்த இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்கள் என்ற புதிய உலக சாதனையை எட்டுவார். அதி விரைவாக ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் என்ற உலக சாதனை தற்போது இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது.

அவர் 300 இன்னிங்சுகளில் 12 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார். 2வது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். அவர் 314 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். 3வது இடத்தில் உள்ள இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககாரா 336 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து, மூன்று பேருமே ஓய்வு பெற்று விட்டனர். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதங்கள் என்ற சாதனை சச்சின் டெண்டுல்கரிடம் உள்ளது. 463 போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள சச்சின் டெண்டுல்கர், அவற்றில் 18 ஆயிரத்து 426 ரன்களை குவித்துள்ளார். 49 சதங்களை விளாசியுள்ளார். தற்போது ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் விராட் கோஹ்லி, முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை கொண்டுள்ள இவர், இத்தொடரில் மேலும் ஒரு புதிய சாதனையை எட்டுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : Sachin ,ODIs Kohli , ODI match, Sachin, record, Kohli
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!