×

நான்... இஸ்ரோ சிவன்

நன்றி குங்குமம்

படிக்கிற நேரம் போக மார்க்கெட்ல மாம்பழம், மாங்காய்களை விற்பனை செய்றதுதான் என் முக்கிய வேலை. அப்பா விவசாயி. மாம்பழம், நெல்  ரெண்டும் பிரதானமா பயிரிடுவார். அவருக்கு உதவியா நானும் வயக்காட்டுல வேலை செய்வேன். போதுமான வருமானம் இல்லாததால எங்கக்காவும்  அண்ணனும் மேற்படிப்பு படிக்கலை. அப்பா, கைலாச வடிவு. அம்மா, செல்லம். அக்கா, சரஸ்வதி. அண்ணன், ராஜப்பா. எனக்குப் பிறகு ஒரு பொண்ணு,  ஒரு பையன்னு ரெட்டையர்கள். இதுல பிறந்த ஒரு வருஷத்துல பையன் காலமாகிட்டான். ஆக, தங்கச்சி மட்டும்தான். தங்கச்சி பேரு ராஜம்.

நான் 1958 ஏப்ரல் மாசம் 14ம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் மேலசரக்கல்விளை கிராமத்துல பிறந்தேன். எங்க குடும்பத்துல முதல் பட்டதாரி  நான்தான். நாகர்கோவில், சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளில படிச்சேன். ஸ்கூல் நாட்கள்ல படிப்பு மட்டுமே பிரதானம். ரொம்ப அமைதியா  இருப்பேன். சத்தமா பேசக் கூட மாட்டேன். வகுப்புல எப்பவும் நான்தான் முதல் மாணவன். படிக்கணும்னு மட்டும்தான் எனக்குத் தெரியும். மத்தபடி  எது படிச்சா நல்ல வேலை கிடைக்கும்னு எல்லாம் தெரியாது. படிப்பு படிப்பு படிப்பு. அவ்வளவுதான். படிப்பு நேரம் போக மார்க்கெட்ல மாம்பழ  வியாபாரம் செய்வேன். அப்பாவுக்கு விவசாயத்துல உதவுவேன்.

அண்ணா, அக்கானு எல்லாருமா அதிகாலைல எழுந்து வயல் வேலைக்கு போவோம். அப்புறம் நான் வீட்டுக்கு வந்து குளிச்சுட்டு ஸ்கூலுக்கு  கிளம்புவேன். ஆரம்பப் பள்ளி முடிஞ்சதும் வல்லங்குமரன்விளைல ஹையர் செகண்டரி. இதுக்கு அப்புறம் நாகர்கோவில் எஸ்டி இந்து காலேஜ்ல  பியூசி. அப்பாவுக்கு உதவணும்னுதான் நாகர்கோவில் காலேஜுல சேர்ந்தேன். பிஎஸ்சி கணிதம் முடிச்சதும் சென்னை எம்ஐடில ஏரோஸ்பேஸ்  இன்ஜினியரிங் சேர்ந்தேன். அப்ப எல்லாம் இன்ஜினியரிங் படிக்கறவங்க ஹெச்.ஏ.எல், என்.ஏ.எல்லதான் வேலை கிடைக்கும்னு எதிர்பார்ப்பாங்க. நானும்  அப்படித்தான் நினைச்சேன். ஆனா, எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைக்கலை.

சரி... தொடர்ந்து படிக்கலாம்னு பெங்களூர்ல எம்இ சேர்ந்தேன். ராக்கெட் சாட்டிலைட் குறித்த படிப்பு. இதை முடிச்சதும் ஸ்பேஸ் சென்டர்ல வேலை  கிடைச்சது. ஆரம்பமே பிஎஸ்எல்வி புராஜெக்ட்தான். உண்மையை சொல்லணும்னா எந்த காலேஜுல சேரணும்... எந்த சப்ஜெக்ட் - படிப்பு -  படிக்கணும்னு எல்லாம் நான் யோசிச்சு முடிவு எடுக்கலை. வீட்டுக்குப் பக்கத்துலதான் படிக்கணும்னு அப்பா கறாரா இருந்தார். அதனால நாகர்கோவில்  எஸ்டி இந்துக் கல்லூரில சேர்ந்தேன். பியூசி முடிச்சதும் எங்க கிராமத்துல இருந்தவங்க இன்ஜினியரிங் படிக்கச் சொன்னாங்க. ஆனா, அப்பாவோட  வருமானம் என்னனு எனக்கு தெரியும். என்னை இன்ஜினியரிங் படிக்க வைக்கிற நிலைல அவர் இல்ல. இதனாலயே பிஎஸ்சி கணிதம் சேர்ந்தேன்.

இதுக்குப் பிறகு எம்எஸ்சி... தொடர்ந்து பேங்க் எக்ஸாம் எழுதி வங்கி வேலை... இப்படி எனக்குத் தெரிஞ்ச அளவுலதான் திட்டமிட்டேன். ஆனா, என்  எதிர்காலம் வேறு விதமா திட்டமிடப்பட்டிருப்பது அப்ப எனக்குத் தெரியாது. அது எங்க சித்தப்பா வடிவத்துல எனக்கு வழிகாட்டுச்சு.பிஎஸ்சிமுடிக்  கிறப்ப ஒருநாள் என் சித்தப்பா செல்லம், என்னைக் கூப்பிட்டு ‘அடுத்து என்ன செய்யப் போறே’னு கேட்டார். என் திட்டங்களைச் சொன்னேன்.  ‘எதையும் நீயா முடிவு செய்யாத... உன் காலேஜ் ப்ரொஃபசர்ஸை கேட்டு முடிவு எடு’னு சொன்னார். அப்படித்தான் என் வாத்தியார் எம்.கிருஷ்ணன்  சாரை போய் சந்திச்சேன்.

அவர் வழிகாட்டு தல்ல எம்ஐடில சேர்ந்தேன்.எம்.கிருஷ்ணன் சார் மட்டும் இல்லைனா என் மொத்த வாழ்க்கையும் வேற பாதைல போயிருக்கும். எம்ஐடில ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்னு வேலை சார்ந்த இன்ஜினியரிங் படிப்புகள்தான் இருக்கும். கிளாசிக்கல்  இன்ஜினியரிங்னு சொல்லப்படுகிற சிவில், மெக்கானிக்கல் எல்லாம் இல்ல. என்னை ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்ல சேரச் சொன்னார். அப்புறம்  பெங்களூர்ல எம்இ. பிறகு ‘விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்’ல பிஎஸ்எல்வி புராஜெக்ட்ல சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு.  பிஎஸ்எல்வி லான்ச்  வரைக்கும் அந்த பிராஜக்டுல இருந்தேன்.

குழுவா பிஎஸ்எல்வி வெற்றி யைக் கொண்டாடினோம். அங்க இருந்து மிஷன் ஸ்டிமுலேஷன் டிபார்ட்மெண்ட்டுக்கு போனேன். அடுத்து ரீயூசபிள்  வாகன புராஜெக்ட்ல மேனேஜர் போஸ்டிங். அங்க சில காலம். அப்புறம் டெபுட்டி டைரக்டர் ஆஃப் என்டிடி புராஜெக்ட். அந்த நேரம்தான் ஜிஎஸ்எல்வி  தோல்வியடைந்தது. அங்க எனக்கு டைரக்டராக பொறுப்பு வர... ஜிஎஸ்எல்வி புராஜெக்ட் குழுவுக்கு தலைமையா இருந்தேன். எங்க குழு வெற்றியும்  அடைஞ்சது. அடுத்து லிக்விட் புரபல்ஷன் சிஸ்டம் (திரவ இயக்கத் திட்ட மையம்) டைரக்டராக போஸ்ட். அங்கிருந்து விக்ரம் சாராபாய் ஸ்டேஷனுக்கு  வந்து டைரக்டராக மூணு வருஷம் பொறுப்பில் இருந்தேன். இப்ப இஸ்ரோ ஸ்பேஸ் தலைமையகத்துக்கு சேர்மன்.

இதற்கிடைல எனக்குத் திருமணமாச்சு. அவங்க பெயர் மாலதி. வீட்டில் பார்த்து முடிச்ச பெண்தான். சொந்த ஊர் நாகப்பட்டினம். வளர்ப்பு,  படிப்பெல்லாம் சென்னை. அவங்க பிஏ வரலாறும் எம்ஏ தமிழும் படிச்சவங்க. கொஞ்ச நாள் ஸ்கூல் டீச்சரா இருந்தாங்க. எங்களுக்கு சித்தார்த் சிவன்,  சுஷந்த் சிவன்னு ரெண்டு பசங்க. குடும்பப் பொறுப்பு எல்லாம் மனைவிதான். என்னால முடிஞ்ச அளவுக்கு குடும்பத்துக்கான நேரத்தையும் ஒதுக்கிக்  கொடுத்திருக்கேன்னு நம்பறேன். ஆனாலும் சில லான்ச் நேரங்கள்ல வீட்டுக்கே போகாம ஆபீஸ்லயே தவம் கிடப்போம். அதுமாதிரி சமயங்கள்ல என்  மனைவி மாலதி தான் குடும்ப சக்கரத்தை அச்சாணியா இருந்து சரியா ஓட வைச்சாங்க; ஓடவும் வைக்கறாங்க.

என்னதான் ராக்கெட் சயின்ஸ்ல வேலை செய்தாலும் எனக்கு கடவுள் பக்தியும் உண்டு. நம்மையும் மீறின சக்தி ஒண்ணு இருக்குனு நம்பறேன்.  எனக்கு மட்டுமில்ல... என் குடும்பத்துக்கும் கடவுள் பக்தி உண்டு.நான் சாதிக்கத் தொடங்கி என் பேரு வெளிய தெரிய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே  அப்பாவும் அம்மாவும் காலமாகிட்டாங்க. அவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க விரும்பினேன். அந்த ஆசை நிறைவேறாமயே போயிடுச்சு. என்  சகோதரரும் சில வருஷங்களுக்கு முன்னாடி கண்ணை மூடிட்டார். இஸ்ரோவைப் பொறுத்தவரை சந்திராயன் - 2 ஸ்டேட்டஸ் இப்ப பாஸிட்டிவ்.  அதன் ஆர்பிட் மிஷன் ஒர்க் ஆகுது. சில புகைப்படங்கள் கூட எடுத்து அனுப்பி இருக்கு. அடுத்ததா சந்திராயன் - 3 வேலைகள் போயிட்டு இருக்கு.  சந்திராயன் - 2 என்ன வெர்ஷனோ அதேதான் சந்திராயன் - 3.

ஆனா, அதில் சில பிரச்னைகள் ஏற்பட்டு சாஃப்ட் லேண்டிங் வேலை செய்யாததால அதை வெற்றிகரமா செய்து முடிப்பதற்கான டெமோ வெர்ஷனா  சந்திராயன் - 3 தயாராகுது. சந்திராயன் - 2ல இருந்த அதே குழுதான் இப்ப சந்திராயன் - 3லயும் இருக்காங்க. நடந்த பிரச்னைகளை சரிசெஞ்சு முழு  வெற்றியை அடையவைக்க முழுமூச்சா உழைச்சுட்டு இருக்கோம். சந்திராயன் - 2 தேசமே எதிர்பார்த்திருந்த ஒரு புராஜெக்ட். அதுல பிரச்னை  ஏற்பட்டப்ப பெரிய ஏமாற்றமா இருந்தது. என்னையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பிச்சுட்டேன். ஏமாற்றத்தைப் பற்றி கவலைப்படாம பிரதமர்  மோடி என்னை அணைச்சு ஆறுதல் சொன்னார். என்னை ஆற்றுப்படுத்திய பிரதமரை எப்பவும் மறக்க மாட்டேன். அப்பதான் இதை முழு வெற்றி  அடைய வைக்கணும்னு முடிவு செஞ்சு சந்திராயன் - 3ஐ கைல எடுத்திருக்கோம்.

இதுபோக ஜிசாட் ஆர்பிட் மிஷன் ககன்யான் பிராஜக்ட் செய்துட்டு இருக்கோம். மனிதர்கள் உட்கார்ந்து போகிற மாதிரியான ஸ்பேஸ் வாகனமா  ககன்யான் இருக்கும். முதல் கட்டமா இந்த ஸ்பேஸ் வாகனத்துல ஹியூமனாய்டு (மனிதன் மாதிரியான தோற்றமுடைய மாடல்) வெச்சு சோதனை  செய்யலாம்னு முடிவு செய்திருக்கோம். இந்த வாகனத்துல நான்கு பேர் அமர்ந்து ஸ்பேஸுக்கு போக முடியும். இதுக்கான நால்வர் தேர்வும்  முடிஞ்சுடுச்சு! இளம் மற்றும் நடுத்தர வயது காம்பினேஷனா அந்த நால்வரும் இருப்பாங்க. முழுமையான இந்திய உருவாக்கத்துல இந்தியா  ஏவக்கூடிய சேட்டிலைட்டா ககன்யான் இருக்கும்.

இந்தப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரும் சிறப்புப் பயிற்சிக்காக அடுத்த 11 முதல் 15 மாதங்கள் ரஷ்யாவுக்குப் போவாங்க. இந்த வருட  இறுதிக்குள்ள ககன்யான் முதற்கட்ட லான்ச் இருக்கும். அப்படி இருக்கணும்னு திட்டமிட்டு வேலை செய்துட்டு இருக்கோம். முழுக்க முழுக்க தமிழ்  மீடியத்துலதான் படிச்சேன். கல்லூரிலதான் ஆங்கிலமே எனக்கு சாத்தியப்பட்டது. நாம எந்த மீடியத்துல படிக்கிறோம் என்பது முக்கியமில்ல. எப்படி  படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். மத்தபடி எந்த ஸ்கூலும், எந்த மீடியமும் நம்ம எதிர்காலத்தை தீர்மானிக்காது. எப்படி படிக்கிறோம் என்பது  மட்டும்தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்.

யார் வேணும்னாலும் உங்க இடத்துக்கு வரலாம். ஆனா, நீங்க கொடுக்கற கடின உழைப்புக்கு மட்டும் யாராலும் டூப் போட முடியாது. இது ஸ்பேஸ்  வேலைக்கு மட்டுமில்ல... எல்லாத் துறைக்கும் பொருந்தும். அதேபோல, ஆசைப்பட்டதோ அல்லது எதிர்பார்த்ததோ கிடைக்கலைன்னா கிடைச்சதை  முழுமையா பயன்படுத்துங்க. என்னையே பாருங்க... எம்எஸ்சி மேத்ஸ், பேங்க் வேலைனுதான் நினைச்சேன். ஆனா, எதிர்பார்த்ததைவிட இன்னைக்கு  பல மடங்கு சிறப்பான இடத்துல இருக்கேன். ஒரு வாய்ப்பு கிடைக்கலைனா வருத்தப்பட்டு உடையாதீங்க. ஏன்னா அதை விட சிறப்பான வாய்ப்பு  காத்திருக்கு! இதுக்கு நானும் என் வாழ்க்கையுமே உதாரணம்!   

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்:வி.வெங்கடேசன்


Tags : Isro Shiva , My main job is to market mangoes and mangoes to go to study time.
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்