×

லவ் ஸ்டோரி-ரோஜாவுக்குப் பெயரா முக்கியம்? விஜய் மில்டன்!

நன்றி குங்குமம்

அற்புதமான கலைஞனின் மனது எல்லாவற்றுக்குமாக சிரிக்கும், எல்லாவற்றுக்குமாக அழும், எல்லோருக்குமாகப் பேசும் என்பார்கள்.  அப்படித்தான்  காதலும். காதலில் இருக்கிறவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். சிறந்த காதலர்களால் நல்ல நட்பைப் புரிந்துகொள்ள  முடியும்! எல்லா நட்பும் காதலாக மலர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. பூக்கள் தந்து, புன்னகை பெற்று, பரிசுகள் பரிமாறி, கை  கோர்த்து கடற்கரையில் நடந்து, நிலாபார்த்து, நிமிஷங்கள் வருஷங்களாயின என கவிதை எழுதுவது மட்டுமே காதல் அல்ல…சரி… காதலை  என்னென்பது... அடம்பிடிக்கும் குழந்தையா, பிரம்பெடுக்கும் டீச்சரா, வரமா, சாபமா? ஒருவன் பூக்கள் உதிர்ந்து கிடக்கிற சாலையை மிகக்கவனமாகக்  கடக்கவும், இன்னொருவன் மலையுச்சியில் இருந்து தலைகுப்புற விழுந்து சாகவும் காதலே காரணம். ஆக, எது காதல்..?

என் காதல், பிரியம் எல்லாம் சேர்ந்தது மெர்ஸியிடம். அவள்தான் என் மனைவி. அத்தை மகள்தான். எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாக் கனவு.  இயக்குநராக வேண்டும்... அது மட்டும்தான் லைஃபில் எனக்கிருந்த ஒரே டார்கெட். அதிலேயே முழு மூச்சாகத் திரிந்து எங்கேயாவது நிரூபிக்க  முடியாதா என இருந்த நேரம். காதல் புனிதமா, சுகமா, சித்திரவதையா, பொழுதுபோக்கு விஷயமா எனக் கேட்டால் எல்லாமும் சேர்ந்தது என சிலர்  சொல்லலாம். ஆனால், எனக்கு அது அனுபவம்தான். மெர்ஸியின் முகம்தான் நீங்கள் கேட்டதும் எனக்கு எல்லா சொற்களையும் திரட்டித் தருது. அப்பா  ‘சினிமான்னா ஒளிப்பதிவாளர்னு ஒரு நல்ல கட்டம் இருக்கு. உன் பார்வை தான் சினிமாவோட முதல் படி. அதைப் படிச்சுக்கோ. பிறகு சினிமா  தன்னால பிடிபடும்’ என்று சொன்னார்.

அவர் இப்படிச் சொல்லக் காரணமிருந்தது. ஏனெனில் என் அப்பாவே ஓர் இயக்குநர்தான். விஜயராஜ் என்பது அவர் பெயர். முழுதாக இரண்டு படங்களை  இயக்கினார். ஏனோ இரண்டும் திரையைத் தொடவே இல்லை! அவரது கனவின் மிச்சம்தான் நான். அதை அவர் புரிந்து கொண்டதும் உணர்ந்ததும் என்  பாக்கியம். ‘குழந்தையை சுமக்கிற மாதிரி வாழ்க்கையை ஏந்திக்கடா மகனே’ எனச் சொல்லிக் கொடுத்தது அவர்தான். அவர் விட்ட இடத்தைத்  தொட்டுப் பிடிக்க வேண்டுமென்று நினைத்தேன். அத்தை வீட்டில் மதப்பற்று அதிகம். அவர்கள் வீட்டில் டிவி கிடையாது. பொழுதுபோக்கு, மதத்தின்  நல்ல தன்மையைக் குறைக்கும் என்பது அவர்கள் எண்ணம். இப்படிப்பட்ட குடும்பத்தில்தான் மெர்ஸி வளர்ந்தார்.

அந்தச்சமயம் பார்த்து எங்கள் குடும்பத்தில் வறுமை. எல்லாமே நெருக்கடி. நான் படித்து முடித்ததும் குடும்பச் சுமையை ஏற்பேன் என்று  எதிர்பார்த்தார்கள்.அப்போது தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளர்களுக்கு நல்ல டிமாண்ட். முதல் வருட பரீட்சையில் கோல்டு மெடல். அடுத்த வருட  பரீட்சையிலும் கோல்டு மெடல். மூன்றாவது வருடம் பரீட்சை ஹாலுக்கு செல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டேன்! காரணம், அந்த  வருடமும் கோல்டு மெடல் வாங்கிவிட்டால் தூர்தர்ஷனில் வேலை கிடைத்து விடும். அதற்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவார்களோ என்று  பயம்! வெளியில் வந்தவன் தனியாக தொழில் கற்கத் தொடங்கினேன். என்ன விஷயம் என்றால், மெர்ஸிக்கு இரக்க மனம். அவளது ஸ்கிரீன் சேவரில்  இன்றும் அன்னை தெரஸாதான் கருணை பொங்கப் பார்க்கிறார். சேவை செய்துகொண்டு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்பது அவளது  விருப்பம்.‘ஏய், லூசு.

உன் நல்ல குணத்திற்கு நல்ல பையனா பார்த்து நல்ல வாரிசுகளை உருவாக்கு...’ என கிண்டல் செய்வேன். வெறும் கழுத்தாக இருக்க வேண்டாமே  என சில ஆபரணங்கள் வாங்கித் தருவேன். இந்த சமயம் வெளிவந்த என்னுடைய ‘கொலுசுகள் பேசக்கூடும்’ என்ற காதல் கவிதைத் தொகுப்பு  பிரபலமானது. வீட்டில், ‘மில்டனுக்கு பொண்ணு பார்க்கணும்...’ என்ற பேச்சு கிளம்பியபோது ‘நானும் பொண்ணு பார்க்க வர்றேன்’ எனக் கிளம்பினது  கூட மெர்ஸிதான். ‘முடி கொட்டுறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணைப் பாத்திடு’ என கேலி செய்தவளும் அவள்தான்.ஒருநாள் புல்லட்டில் மெர்ஸியை  அமரவைத்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். ‘பலூன் சுடட்டுமா’ என்று அவள் கேட்க, நான் தலையசைக்க, 5 ரூபாய்க்கு 10 குண்டுகள் போட்டுத்  தந்தார்கள். 2 பலூன்கள் மட்டும் வெடித்தன.

‘எங்கே நீ சுடு’ என மெர்ஸி சொன்னதும், ‘சுட்டா, என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..?’ எனக் கேட்டேன். முதல் குண்டிலேயே பலூன் வெடித்து  விட்டது. அடுத்த சோதனைக்கு ஆளாகாமல் இருவரும் வீடு திரும்பினோம்.அன்றைக்குக் கூட காதல் விதை விழுந்திருக்கலாம். வெறும்  சொந்தம்தானா, மேலான அக்கறையா, அதையும் தாண்டிய பேரன்பா? இதுவே காதலா? எங்களுக்கே ஒன்றும் புரியவில்லை. காதலர் தினத்திற்கு -

நீ என்ன வேண்டும் எனக்கு?
உன்னைப் பார்த்தாலே
மனசுக்குள் துளிர்.
பார்க்காதபோது
பார்க்க வேண்டும் போல் ஆகிறது.
நாம் பேச நேரிட்டுவிட்டாலோ
பேசிப் பிரிந்ததும்
என்ன பேசினோம் என்று
யோசித்து யோசித்தே நேரம்
போகிறது...
- என்று தொடங்கி
-நம்மிடையே இருக்கிறதே ஏதோ
ஒன்று குழந்தை போல் அழகாகச்
சிரித்துக் கொண்டு
அதற்கு என்னதான் பெயர்?
அட, விட்டுத்தள்ளு
ரோஜாவுக்குப் பெயரா முக்கியம்?

- என்று கவிதை எழுதித் தந்தேன். ‘போய் முதல்ல உன் வேலையைப் பாரு’ என்று மெர்ஸி சிரித்தாள். ‘இல்லை, எந்த வேலையையும் பார்க்க  முடியலை’ என்றேன். ஆசீர்வதித்தாள் மெர்ஸி. நடந்தது திருமணம்.இன்றைக்கும் என் கார் கதவைத் திறந்தால் பெல் சங்கீதம் ஒலிக்கும். ராஜஸ்தான்  சென்றபோது அவளுக்காக வாங்கி வந்தது. அதை பத்திரமாய் வைத்திருந்து திருப்பித் தந்தாள். நாலு கார்கள் மாற்றியும், முன்னிருக்கையில் அதுவே  என் முகமாகத் தெரிகிறது. அவளுக்கு என் திறமை சிறப்பிக்கப்படவில்லை என முன்பு மனத்தாங்கல் இருந்தது. முதல் குழந்தை பிறந்த நேரம்.  ‘காதல்’ வெளியானது. படத்தைப் பார்த்திருக்கிறார் பாலு மகேந்திரா. ‘உங்களின் அடுத்த இடத்தை நிரப்பப்போகிறவர் யார்?’ என்ற கேள்விக்கு,  ‘எல்லாச் சிறப்போடும் விஜய்மில்டன் அருகில் இருக்கிறான்’ என்றார்.

மெர்ஸிக்கு அவ்வளவு சந்தோஷம். ஒன்றும் புரியாமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தாள். நேரில் என்னைப் பார்த்த பாலு சார் ‘உனக்கு  கொடுக்காமல் நேஷனல் அவார்டு எதுக்கப்பா’ என்று சண்டை பிடித்தார்.மெர்ஸிதான் என்னை மட்டுமில்லை... குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக  அரவணைக்கிறாள். அப்பா, அம்மா, குழந்தைகள், தம்பி, அவன் குடும்பம் என, தன் நீள் கரங்களில் அன்பு சேர்த்து கூட்டுக் குடும்பமாகக் கட்டிப்  போட்டிருக்கிறாள். அவனின்றி ஓரணுவும் அசையாது என்பார்கள். அவளின்றி ஓரணுவும் அசையாது என்பது எங்கள் வீட்டுப் புதுமொழி. எங்களை  இவ்வளவு அனுசரணையாகவும், பத்திரமாகவும் வைத்திருக்கிற அவளுக்கு நாங்கள் அப்படியொன்றும் அதிகம் செய்து விடவில்லை. கனிந்து  பெருகியிருக்கிற மெர்ஸியின் அன்புக்கு ஈடானதாக எதையும் சொல்லிவிட முடிவதில்லை.

மலையடி பிரசங்கத்தில் இயேசு ஒரு தடவை -
அமைதி கொணர்வோர்
அருளப் பெற்றவர்கள்…
அவர்கள் சொர்க்க
ராஜ்யத்தை அடைவார்கள்!
என்று சொன்னார்.  எனக்குக் கிடைத்த காதல் அத்தகையது. காதலில் நமக்கு வரம் கிடைத்தால் திளைக்கலாம்; நனைந்தால் முளைக்கலாம்!l

தொகுப்பு: நா.கதிர்வேலன்


Tags : Rose ,Vijay Milton , The mind of a wonderful artist will laugh all together, cry all over, speak for everyone.
× RELATED கொரோனா சிறப்பு நிதி என கூடுதல்...