×

கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவு பாமகவுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி: ராமதாஸ்

சென்னை: கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாமகவுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்க வேண்டும். கடை பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டியது கட்டாயம் என்ற அரசாணை தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பாமகவின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நல ஆணையர் நந்தகுமார் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில் 1948-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக 1983, 1984 ஆகிய ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும். மற்ற மொழிகள் பெயர்ப்பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும். இந்த விதி பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. ஏராளமான இயக்கங்களையும் நடத்தியிருக்கிறது. ஆனாலும் தமிழில் பெயர்ப்பலகைகளை எழுதுவதை கட்டாயமாக்குவது என்பது கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாததாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகை தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணையை செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இது பாமகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். பாமகவின் கோரிக்கையை ஏற்று, பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது ஆகும். ஆனால், இந்த அறிவிப்பை செயல்பாட்டிலும் காட்ட வேண்டும். அவ்வாறு செய்யும்போது தமிழகத்தின் தமிழ்த் தெருக்களில் நிச்சயம் தமிழ் மணக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Tags : Bamaka ,shops ,Tamil Nadu Government ,Government ,victory ,Ramadas ,Nadu , Shop, namespace, tamil compulsory, government of Tamil Nadu
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...