×

சிவகாசி பட்டாசு ஆலைகளில் 14 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலைகளில் சிபிஐ குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சிவகாசி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி செயல்படுகின்றனவா? பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? என்பன குறித்து ஆய்வு செய்ய சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் சிவகாசியில் 14 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சுப்பையன் மற்றும் சுந்தரவேல் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பட்டாசு தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் பட்டாசு தயாரிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது. குறிப்பாக பேரியம் என்ற ரசாயனம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதோடு காற்று மற்றும் ஒலி மாசை குறைக்கும் வகையில் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் போன்ற ரசாயனங்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ இன்று காலை தொடங்கி திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த சிபிஐ குழுவினர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் அதன் கலவைகளையும், செய்து முடிக்கப்பட்ட அனைத்து வகை பட்டாசுகளையும் அட்டைப் பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து எடுத்துச் சென்றனர். மத்திய ஆய்வகங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : CBI ,inquiry ,fireworks factory ,Sivakasi ,team , Sivakasi, Fireworks Plant, 14 people, CBI officers team, inspection
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...