×

கொரோனா பீதி: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஊதச் சொல்லி சோதனை செய்ய கூடாது... போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்!

சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என்பதை சோதிக்க முகத்துக்கு அருகில் ஊதச் சொல்லி சோதனை செய்வதை தவிர்க்க போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸானது கடந்த சில நாட்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த தொற்றின் காரணமாக சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் காவல்துறையினருக்கு குறிப்பாக பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய காவலர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபக்கமாக, பெரும்பாலும் போக்குவரத்து காவல்துறையினரே பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களான சாலைகளில் நின்று போக்குவரத்தை சரி செய்வது, அதுபோன்று வாகன சோதனையில் ஈடுபடுவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

அவ்வாறு வாகன சோதனையில் ஈடுபடும் போது இரவு நேரங்களில்,  குடிபோதை வாகன ஓட்டிகளை சோதனை செய்வதற்காக அவர்களை முகத்திற்கு நேராக ஊதச் சொல்லி சோதனை செய்கிறார்கள். இதுபோன்ற சோதனை முறையை கைவிட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். சென்னை முழுவதும் உள்ள போக்குவரத்து காவல்துறை இதுபோன்ற வாகன சோதனையில் ஈடுபடும் போது அவசியமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதே போல ப்ரீத் அனலைசர்கள் மட்டுமே கொண்டு குடிபோதை வாகன ஓட்டிகளை கண்டறிய வேண்டும் என்றும், ஊதச் சொல்வது போன்ற நடைமுறைகளில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : drivers ,Drunk drivers , Corona, Alcohol, Vehicle, Trial, Do Not, Traffic Police, Instruction
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...