×

அரசு பள்ளி மேற்கூரை சிமென்ட் பெயர்ந்து விழுந்து மாணவன் படுகாயம்: ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே அரசுப் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சிமென்ட் உடைந்து விழுந்ததில் மாணவன் படுகாயமடைந்தார். சக மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு குன்னத்தூர், வெள்ளைகவுண்டனூர் உள்ளிட்ட  அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 275 மாணவர்கள்  6ம்  வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இங்கு குன்னத்தூர் அடுத்த வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரது மகன் அன்புசெல்வன்(13) 8ம் வகுப்பு படித்து  வருகிறார். இவருடன் அதே வகுப்பில் 39 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில்  நேற்று பிற்பகல்  3 மணியளவில் வகுப்பு அறையின் மேற்கூரை சிமென்ட் திடீரென பெயர்ந்து அன்புசெல்வன் தலை மீது விழுந்தது. இதில் மாணவன் பலத்த ரத்தகாயம் அடைந்தான். இதைப்பார்த்ததும் அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்த தலைமையாசிரியை லதாராணி, மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து  பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தந்தை குமார், அன்புசெல்வனை ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு மாணவனுக்கு தலையில் 3 தையல்கள் போடப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி கட்டிடம் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளி கட்டிட மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து மாணவன் படுகாயம் அடைந்துள்ளான். எனவே, மேலும் இதுபோன்று அசம்பாவிதம் மேலும் ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government school rooftop cement ,Government School , Government School
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...