×

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ் உடன் பங்கேற்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

26ம் தேதி மாநிலங்களவை தேர்தல்

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், செல்வராஜ், முத்துக்கருப்பன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதில் திமுக தனது வேட்பாளர்கள் 3 பேரை கடந்த வாரமே அறிவித்து விட்டதால், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

அதிமுக  வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சி தலைமை அறிவித்தது. அதன்படி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகிய 2 பேர் பெயர்களும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு ஒரு சீட்டும் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகிய 2 பேருக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கியதால் அதிமுக மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதிமுக  வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்


இந்நிலையில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை தலைமை செயலகம் வந்தனர். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் 3 பேரும் சட்டப்பேரவை செயலாளரும் மாநிலங்களவை தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்தனர்.



Tags : elections ,Rajya Sabha ,AIADMK ,OPS , AIADMK, Candidates, Candidates, Filing, Rajya Sabha, Election
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு