×

எழுத்தாளர்களின் எழில்மிகு கிரீடம்: இன்று (மார்ச் 12) சாகித்ய அகாடமி விருது தொடங்கிய தினம்

எந்த ஒரு துறையிலும ஒரு மனிதன் என்னதான் சாதித்தாலும், அவனுக்கு பொது இடங்களில் கிடைக்கும் பாராட்டே மிகப்பெரிய பெருமை பெற்றுத்தரும். அந்த வகையில் எழுத்தாளர்களுக்கு கிரீடம் + கவுரவம் தரும் மிகப்பெரிய விருது சாகித்ய அகாடமி. அந்த விருது தொடங்கப்பட்டது 1954ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி. ஏனிந்த விருது? அந்த விருதின் பின்னணியை கொஞ்சம் பார்க்கலாமா?

இந்தியாவில் சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்காக தரப்படும் விருதே சாகித்ய அகாடமி ஆகும். இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கியங்களில் சாதித்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது. விருதுடன் பரிசுத்தொகை ரூ.1 லட்சம், பட்டயமும் வழங்கப்படுகிறது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. சிறந்த சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம், பயண நூல், வாழ்க்கை வரலாறு, நாடகம், சுய சரிதை உள்பட அனைத்து வகை இலக்கிய வடிவங்களுக்கும்  இவ்விருது வழங்கப்படும்.

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது 1955ம் ஆண்டு, ‘தமிழ் இன்பம்’ என்ற கட்டுரை நூலுக்காக ரா.பி.சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. அப்போதைய பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம். தொடர்ந்து தொ.மு.சிதம்பரரகுநாதன் எழுதிய ‘பாரதி; காலமும் கருத்தும்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு வழங்கப்பட்டது. பின் 1988ல் வா.செ.குழந்தைச்சாமி எழுதிய, ‘வாழும் வள்ளுவம்’ என்ற நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2001ல் சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’, 2003-ம் ஆண்டில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. கடந்த 2009 முதல் பரிசுத்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி, பட்டயத்துடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தேர்ந்தெடுப்பது எப்படி? : முதலில் சாகித்ய அகாடமி நிர்வாகம் ஆண்டு முழுவதும் வெளிவரும் நூல்களை தேர்வு செய்யும். அதில் சிறந்ததை தேர்வு செய்ய ஒவ்வொரு மொழிக்கும் ஒரு குழுவை நியமிக்கும். இக்குழுவானது குறிப்பிட்ட புத்தகங்களைத் தேர்வு செய்து மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு அனுப்பும். ஒவ்வொரு கருத்தாளரும் 2 நூல்களை பரிந்துரை செய்வார்கள். பரிந்துரை செய்யப்பட்ட நூல்களில் இருந்து சாகித்ய அகாடமி அமைக்கும் நடுவர் குழு, ஒரு நூலை சிறந்ததாக தேர்வு செய்யும். நடப்பாண்டில் சிறந்த நூல்கள் வரவில்லை என்றால், கடந்த ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சாகித்ய அகாடமி விருதுகளை தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் பெற்றுள்ளனர். மதுரையின் தற்போதைய எம்பியான சு.வெங்கடேசன், திருநெல்வேலியை சேர்ந்த தி.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், நாகர்கோவிலை சேர்ந்த பொன்னீலன், விருதுநகரை சேர்ந்த மேலாண்மை பொன்னுச்சாமி, சிவகாசியை சேர்ந்த நா.பார்த்தசாரதி, சின்னமனூரை சேர்ந்த சி.சு.செல்லப்பா, பாடலாசிரியர்கள் வைரமுத்து, மு.மேத்தா என இப்படி ஒரு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுபோன்ற விருதுகளே அவர்கள் மேலும், பல உன்னத படைப்புகளை உருவாக்குவதற்கான உந்துசக்தியாக விளங்குகிறது.

சாகித்ய அகாடமியானது, மொழி பெயர்ப்புக்கு ஒரு விருது, குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய அகாடமி விருது, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான யுவபுரஸ்கார் விருது போன்ற விருதுகளையும் வழங்குகிறது. இம்மூன்று விருதுகளுடன் 50 ஆயிரம் பரிசுத்தொகை, பட்டயங்களும் அளிக்கப்படுகிறது. எழுத்தாளர்களை ஊக்குவிப்போம். மேலும், பல படைப்புகளை, அவர்கள் உருவாக்க வழி வகுப்போம்.

Tags : Sagitta Academy Award
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...