×

சாலைக்கிராமம் கண்மாயில் கொட்டப்படும் கோழி கழிவுகள்

*பறவைக்காய்ச்சல் பீதியில் பொதுமக்கள்

இளையான்குடி : இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பெரிய கண்மாயில் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சுகாதாரத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் பெரிய கண்மாய் 7.98 கிலோ மீட்டர் நீளமுடையது. 353.89.5 ஹெக்டேர் பரப்பளவுடைய இந்த சாலைக்கிராமம் கண்மாய், சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், குயவர்பாளையம், அய்யம்பட்டி, வடக்கு வலசைக்காடு, தெற்கு வலசைக்காடு, நடுவலசைக்காடு ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட 334.81 ஹெக்டேர் நஞ்சை நிலத்திற்கும், 1555.83 ஹெக்டேர் புஞ்சை நிலத்திற்கும் தேவையான தண்ணீரை சேமித்து, 7 மடைகளின் மூலமாக வாய்க்கால் வழியாக விவசாய நிலங்களுக்கும், ஊருணிகளுக்கும் தண்ணீரை வழங்கி வந்த இந்த சாலைக்கிராமம் பெரிய கண்மாய், தற்போது கோழி கழிவுகளால் நிரம்பியுள்ளது.


கருவேல மரங்களுக்கு இடையே கொட்டப்படும் இந்த கோழி கழிவுகள், காற்றடிக்கும் திசையில் பறந்து கண்மாய் முழுவதும் பரவி வருகிறது.

அதனால் காற்று மாசு அடைவதோடு, கண்மாய் தண்ணீரும் கெட்டு வருகிறது. தண்ணீரில் கலக்கும் கழிவுகளால், அதில் குளிப்பவர்களுக்கு அரிப்பு, நமைச்சல் உள்ளிட்ட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குடியிருப்பு அருகில் இந்த கோழி கழிவுகள் கொட்டப்படுவதால், துற்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதனால் அப்பகுதி மக்கள் பறவை காய்ச்சல் வருமோ என பீதியில் உள்ளனர்.


மேலும் இந்த கோழி கழிவுகளை திண்பதற்காக நாய்கள் வருவதால், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் உள்ளனர்.


நேற்று முன்தினம் இந்த கோழி கழிவுகளை தேடி வந்த நாய்கள் கடித்து பாண்டி என்பவரின் 15 ஆடுகள் இறந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக கண்மாயில் கொட்டப்படும் இந்த கோழி கழிவுகளை அகற்ற இதுவரை சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கண்மாயை பாதுகாப்பதற்காக உள்ள கமிட்டி இதுகுறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. அதனால் கண்மாயில் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்றவும், இனிமேல் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலைக்கிராமம் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைக்கிராமம் பெரிய கண்மாயை கவனிப்பதற்கு பொதுப்பணித்துறை, நீர்பாசன கமிட்டி, கண்மாய் கமிட்டி ஆகியவை இருந்தும், கண்மாய் சீரமைப்பு என்பது இதுநாள்வரை கேள்விக்குறியாகவே உள்ளது என சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டாகவே உள்ளது.


Tags : water storage areas , ilayankudi ,Poultry waste ,water storage
× RELATED நீர் தேங்கும் இடங்களை பராமரிக்க தவறினால் அபராதம்