×

வனஎல்லையில் அகழி பராமரிக்கும் பணி தீவிரம்: வனவிலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க நடவடிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த வனஎல்லையில் உள்ள தோட்டங்களுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க, அகழியை பராமரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன எல்லைகளில் இருக்கும் விவசாய தோட்டங்களில், யானை மட்டுமின்றி காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உலாவந்து செல்கிறது. இதில், சேத்துமடை, செமனாம்பதி, போத்தமடை உள்ளிட்ட  பகுதியில் உள்ள விளை நிலங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி யானைகள் வந்து செல்வதால், அப்பகுதியினர் அச்சமடைகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வன எல்லையையொட்டிய இடங்களில் அடிக்கடி யானை, காட்டுபன்றி, மான் உள்ளிட்ட விலங்குகள் இடம் பெயர்வது அதிகரிப்பால்,  சுமார் 8 ஆண்டுக்கு முன்பு, சேத்துமடையிலிருந்து செமனாம்பதி வரையிலும் 5 கி.மீ தூரத்துக்கு 3 மீட்டர் அகலம், 2 மீட்டர்  ஆழத்திற்கு அகழி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த அகழியை தொடர்ந்து பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டன. இதனால், கடந்த சில ஆண்டுகளாக, வனத்திலிருந்து வெளியேறிய யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வனஎல்லையில் உள்ள தோட்டம், விளை நிலங்களில் புகுந்து பயிர் மற்றும் தென்னை, வாழை உள்ளிட்டவற்றை நாசப்படுத்தியது. அதிலும் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், வனத்திலிருந்து இரை, தண்ணீர் தேடி வெளியேறும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிலும் யானை, காட்டு பன்றிகளே, தோட்டங்களில் அதிகம் உலா வந்து விளை நிலங்களை நாசப்படுத்துகிறது. இந்நிலையில், வன எல்லைப்பகுதியில் பல ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட அகழியை பராமரித்து, விலங்குகள் இடம்பெயர்ந்து விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட சேத்துமடை, போத்தமடை, செமனாம்பதி, தம்பம்பதி உள்ளிட்ட பல இடங்களில், வனச்சரகர் காசிலிங்கம் கண்காணிப்பில், அகழியை தூர்வாரி அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இப்பணி இன்னும் சில நாட்கள் தொடர்ந்திருக்கும் எனவும், இதன் மூலம் விலங்குகள் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் புகுவது தடுக்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : wildlife migration ,Forest Lane ,Pollachi , Pollachi
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!