கோடை வெயில் துவங்கும் நிலையில் மண்பானை, கூஜாக்கள் தயாரிப்பு விறுவிறு

மானாமதுரை : கோடை வெயில் தொடங்கிய நிலையில், மானாமதுரையில் மண்பானைகள், கூஜா வகைகள் தயாரிப்பு பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மண்பாண்ட கலைப் பொருள்களுக்கு பெயர் பெற்றது. நம்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம் மானாமதுரை பகுதி கண்மாய்களில் கிடைக்கும் 7 வகையான மண்ணின் தனித்தன்மை தான்.

மானாமதுரை நகரில் குலாலர் தெரு, உடைகுளம், சன்னதிபுதுக்குளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பது பிரதான தொழிலாக உள்ளது.  இங்கு சீசனுக்கு தகுந்தவாறு விநாயகர் சிலைகள், அக்னிச் சட்டிகள், கார்த்திகை விளக்குகள், வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப்பொருள்கள், விதவிதமான அடுப்பு வகைகள், பூந்தொட்டிகள், சமையல் சட்டிகள், மண்பானைகள், கூஜா என பல வகையான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

கோடைகாலம் தொடங்கியதும் இங்கு மண்பானை தயாரிப்பு தீவிரமடையும். நவீன காலத்துக்கு ஏற்ப மண்பானைகள் பல டிசைன்களில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், மண் கூஜாக்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் குடிநீரை விட மண்பானைகளில் குளிர்விக்கப்பட்ட குடிநீர் ஆரோக்கியமானது. பானையில் உள்ள குடிநீர் மண்வாசனையுடன் தனிச்சுவையாக தொண்டையை குளிரச் செய்து புத்துணர்ச்சியை ஏற்படுவதை உணர முடியும்.  எனவே பரவலாக மண்பானைத் தண்ணீரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் மண் பானைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமும் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் கொடுத்தும் மண்பானைகளை சந்தைப் படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் மானாமதுரை வந்து தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுத்து மண்பானைகள், கூஜாக்களை விற்பனைக்கு வாங்கிச் செல்கின்றனர். தற்போது மானாமதுரையில் மண்பானை, கூஜாக்கள் ரூ.80 லிருந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை கூடவில்லை

மண்பாண்ட தொழிலாளி கணேச பாண்டியன் கூறுகையில், கோடைகாலத்தில் சாதாரண தண்ணீரே கொதி நிலையில் இருப்பதால் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாத மக்கள் குளிர்ந்த நீர் அருந்த விரும்புவது வழக்கம். பல ஆயிரம் ஆண்டுகளாக மண்பானையில் வைக்கப்படும் குடிநீர் அளவான குளிரில் இருக்கும். இதனை அருந்துவதால் சளி, ஜலதோசம் பிடிக்காது. எனவே குழந்தைகளுக்கும் மண்பானையில் வைத்த குடிநீர் ஆரோக்கியமானது. தற்போது கண்மாய்களில் மண் எடுக்க தடை, வாகன வாடகை, தேங்காய்மட்டை, விறகு என உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்தாலும் கடந்த ஆண்டு விற்ற விலைக்கே வழங்குகிறோம் என்றார்.

Related Stories:

More
>