×

மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர் பகுதிகளில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனை அமோகம்

மன்னார்குடி: சுட்டெரிக்கும் கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் மன்னார்குடி, கோட்டூர் மற்றும் கூத்தாநல்லூர் பகுதிகளில் தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகமாக நடக்கிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக கடும் கோடை வெயில் சுட்டெரித்தது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. அதனை நிரூபிக்கும் வகையில் மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கடந்த 1 மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் இதைவிட வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோடை காலத்தில் வெயிலிலிருந்து உடல் சூட்டை தணிக்க மக்கள் பழங்கள், பழச்சாறுகள், கூழ், இளநீர், பதனீர், தர்பூசணி, சர்பத் ஆகியவற்றை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர் ஆகிய நகரங்கள் உள்ளிட்ட அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் சில சரக்கு வாகனங்கள், சைக்கிள், தள்ளுவண்டிகள் மூலம் இளநீர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சுகள் போன்றவை தெருக்களிலும் விற்பனைக்கு வருவதால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வாங்கி விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதனால் உடம்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் குளிர்ச்சியும் தருவதால் தாகத்திற்கு நல்ல இதமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், குளிர் பானங்களை வாங்கி குடிப்பதை விட மக்கள் தற்போது இயற்கையான பக்க விளைவுகள் அல்லாத இளநீர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு போன்றவற்றை தேடி விரும்பி சாப்பிடுவது வரவேற்கத்தக்கது. இவைகளின் விளைச்சல் வறட்சியின் காரணமாக சாகுபடி குறைந்து போனதால் தற்போது விலை சிறிதளவு உயர்ந்துள்ளது. கடந்தாண் டை விட தர்பூசணி கிலோ ஒன்றிற்கு ரூ 5 முதல் 7 ரூபாயையும், இளநீர் ரூ 5 கூடுதலாகவும் விற்பனை செய்யப் படுகிறது என்று கூறினர்.

கோடை வெயிலை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் ராஜா கூறுகையில், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலுக்கு தேவையற்ற கலோரிகளை மட்டுமே கொடுக்கிறது. அதனால் வேறு பயன்கள் எதுவும் இல்லை. நீர் சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். தண்ணீர் தாகத்தை தீர்க்க வெள்ளரி பிஞ்சுகள் சிறந்த பலனை அளிக்கும். தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தரும். அதன் விதைகள் சிறுநீரகத்திற்கு நல்லது. நீர்ச்சத்து மிகுந்துள்ளது. வெள்ளரியில் சோடியம் அதிகளவில் உள்ளது. உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடுசெய்யும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. கோடை வெயிலில் சுற்றுவதால் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு வெள்ளரி சாறு நல்ல தீர்வாக உள்ளது எனக்கூறினார்.

Tags : areas ,Mannargudi ,Koothanallur , Watermelon
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...