×

உலகையே உலுக்கும் கோவிட்-19 பாதிப்பு: ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதித்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகின் 123 நாடுகளில் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்க வருவதற்கு 30 நாட்கள் தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க 30 நாள் தடை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவி ரீடா வில்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை அடுத்து 2 பேரையும் தனிமைப்படுத்தி ஆஸ்திரேலியா சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கும் மனைவிக்கும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்ட்டுள்ளதாக டாம் ஹாங்க்ஸ் அகவல் அளித்துள்ளார். இந்தியாவிலும் வைரஸ் தாக்குதலுக்கு 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிப்.,15க்கு பிறகு, இத்தாலி, ஈரான், சீனா, தென்கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் உட்பட அனைத்து சுற்றுலா பயணிகளும், கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அதேபோல், பொதுவாக விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (ஓசிஐ) அட்டை வைத்திருப்பவர்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் உட்பட அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசாக்கள் இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், ஐநா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. மார்ச் 15 முதல் 25-ம் தேதி வரை ரோமுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக தனது வீட்டிலேயே தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 62 வயதான அவர் தற்போது குணமாகி வருவதாக தெரியவந்துள்ளது. 46 வயதான பிரான்ஸ் நாட்டு கலாச்சாரத்துறை அமைச்சர் பிராங்க் ரீஸ்டரும், கோவிட்-19 பாதிப்பு காரணமாக கடந்த 9-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் காண தனிமை வார்டுக்குச் சென்றபோது அவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் தனிமை வார்டில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பிரான்ஸ் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 5 எம்.பி.க்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இராஜ் ஹரிர்சிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஈரானைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் பதேமே ரபார், முகமது அலி ரமாசானி ஆகியோர் கோவிட்-19 பாதிப்பு காரணமாக இறந்துவிட்டனர். மேலும் 20 எம்.பி.க்கள் கோவிட்-19 பாதிப்பு காரணமாக தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டிலுள்ள ஜனநாயக கட்சியின் தலைவர் நிக்கோலா ஜிங்காரீட்டி, கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கடந்த வாரம், வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஸ்பெயின் நாட்டிலுள்ள வோக்ஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜேவியர் ஒர்டேகா ஸ்மித், கோவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரு மாநாட்டில் பங்கேற்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதே நாட்டைச் சேர்ந்த மேலும் சில எம்.பி.க்களுக்கும் கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176லிருந்து 1,26,139 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக உயர்ந்துள்ளது.


Tags : Trump ,arrival ,US ,Europe , Gov.-19, Europe, USA, 30 Days, Prohibition, President Trump
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...