சேலையூர் அருகே காரில் கடத்திய 2 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்: வாலிபர் கைது

தாம்பரம்: சேலையூர் அருகே காரில் கடத்திய 2 டன் செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள காமராஜபுரம் மசூதி காலனி அருகே நேற்று முன்தினம் இரவு சேலையூர் காவல் நிலைய போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் இடையூராக நின்று கொண்டிருந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அதில் செம்மரகட்டைகள் இருந்தது தெரியவந்தது. காரை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் ஆணையர் சகாதேவன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கார் நின்ற பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் வாலிபர் ஒருவர் காரை ஓட்டி வந்து சாலையில் விட்டு சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, சிசிடிவியில் பதிவான வாலிபர் யார் என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை விட்டு சென்றவர் மேடவாக்கம், விஜயநகர், பூங்கா தெருவை சேர்ந்த ஷாஜஹான் (36) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காமராஜபுரத்தை சேர்ந்த ஒருவர் செம்மரங்களை காரில் கொண்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஷாஜஹானை சேலையூர் போலீசார் கைது செய்து தாம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில், மேலும் சிலருக்கு தொடர்புள்ளது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். செம்மரங்களை கைப்பற்றிய வனத்துறையினர் அது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: