×

அலறியபடி ஆர்பிஐ கதவை தட்டுகிறது அடுத்த அபாயத்தில் லட்சுமி விலாஸ் வங்கி?2,200 கோடி திரட்டினால் தான் தலை தப்பும்

* யெஸ் வங்கி கதியாகுமா என மக்கள் அச்சம்

மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கி 2,200 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்குமாறு, ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உதவியை நாடியுள்ளது.   வராக்கடன் சுமையால் தள்ளாடிய யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பண பரிவர்த்தனை உள்ளிட்ட சில வசதிகள் மீண்டும் வழங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோன்று லட்சுமி விலாஸ் வங்கியும் நிதி பற்றாக்குறையால் தள்ளாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகள் போதுமான மூலதன நிதியை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அது வலிமையான நிதி நிலையில் உள்ள வங்கியாக கருதப்படும்.

 ரிசர்வ் வங்கி விதிகளின்படி குறைந்த பட்சம் மூலதன நிதி 9 சதவீதம் இருந்தால்தான் நல்லது. ஆனால், லட்சுமி விலாஸ் வங்கியிடம் இந்த நிதி 2018ம் ஆண்டு டிசம்பரில் 7.57 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் கணக்கீட்டின்படி இந்த நிதி 3.46 சதவீதமாக குறைந்து விட்டது.  கடும் நிதி தள்ளாட்டத்தில் உள்ள இந்த வங்கி, 2018 மற்றும் 2019ம் ஆண்டில் 1,430 கோடி திரட்டியது. அதன்பிறகு இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்சுடன் இணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த காரணமும் கூறாமல், ரிசர்வ் வங்கி தடை போட்டு விட்டது. இது குறித்து வங்கி வட்டாரத்தை சேர்ந்த சிலர் கூறுகையில், லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலை மிக மோசமாகி வருகிறது. நிகர வராக்கடன் கடந்த 2018 டிசம்பரில் 13.95 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் இது 23.27 சதவீதம் ஆகிவிட்டது. நிகர வராக்கடன் சதவீதமும் 7.64 சதவீதத்தில் இருந்து 9.81 சதவீதமாக உயர்ந்து விட்டது.

சொத்து மூலமாக கிடைக்கும் வருவாய் கடந்த 2018 டிசம்பரில் 3.9 சதவீதம் குறைந்து விட்டது. இது கடந்த ஆண்டு டிசம்பரில் 4.4 சதவீதம் சரிந்தது. நிகர இழப்பு கடந்த டிசம்பர் மாதத்தின்படி 335 கோடியாக இருக்கிறது என்றனர்.  இதனால், வங்கியின் நிதிநிலையை பெருக்கி காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்சுடன் இணைக்கும் முயற்சி ரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டு விட்டதால், சரியான தகுதி படைத்த முதலீட்டாளரை தேர்வு செய்வதற்கு ரிசர்வ் வங்கி உதவியை நாடியுள்ளது. யார் பணம் கொடுத்தாலும் அவர்களிடம் வங்கியை ஒப்படைத்து விடலாம் என்ற முடிவுக்கே வங்கி நிர்வாகம் ஏறக்குறைய வந்து விட்டது என்கின்றனர் சில வங்கியாளர்கள்.  ஏற்கெனவே, அமெரிக்காவை சேர்ந்த டில்டன் பார்க் கேபிடல் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியை வாங்க முடிவு செய்திருந்ததாகவும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியை அணுகிய இந்த நிறுவனம், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால், முடிவு எதுவும் ஏற்படவில்லை. மேலும், டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியில் உள்ள 51 சதவீத பங்குகளை வாங்கி முழுமையாக நிர்வாகத்தை கைப்பற்ற திட்டமிட்டது. வங்கி நிர்வாகத்தையும் அணுகியது. இதுபோல், சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் வங்கியும் லட்சுமி விலாஸ் வங்கியை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வரவில்லை.   இந்த சூழ்நிலையில்தான், வங்கியின் மூலதன நிதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ள லட்சுமி விலாஸ் வங்கி, ரிசர்வ் வங்கி உதவியை நாடியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பங்குவிற்பனை செய்து 250 மில்லியன் டாலர் (சுமார் 1,800 கோடி) முதல் 300 மில்லியன் டாலர் (2,200 கோடி) வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அப்போதுதான் நிதி இருப்பு போதுமான அளவுக்கு கிடைக்கும். இதற்காக 49 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான பங்குகளை விற்க வேண்டும். 49 சதவீத பங்குகளுக்குள் விற்க ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி தேவையில்லை. அதற்கு மேல் பங்குகளை விற்று நிதி திரட்ட அனுமதி பெற வேண்டும்.

 ஏற்கெனவே பங்கு விற்பனை மற்றும் பிற நிதி நிறுவனங்கள், வங்கிகளுடன் இணைப்பு முயற்சி தடைபட்டு விட்டதால், ரிசர்வ் வங்கி உதவியை இந்த வங்கி நாடியுள்ளது. ஏற்கெனவே, வராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் யெஸ் வங்கி திவால் நிலைக்கு சென்று விட்டது. லட்சுமி விலாஸ் வங்கி குறித்த தகவல்கள் வெளியானதால், அதே போன்ற நிலை லட்சுமி விலாஸ் வங்கிக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் தங்கள் டெபாசிட்டுகளை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். மோசமான நஷ்டம், நிதி இழப்பு தமிழகத்தை சேர்ந்த ஒரு வங்கிக்கு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறைந்த பட்சம் 9 சதவீதம் போதுமான மூலதன இருப்பு வைத்திருக்க வேண்டும் ஆனால், கடந்த டிசம்பர் நிலவரத்தின்படி, லட்சுமி விலாஸ் வங்கியின் போதுமான மூலதன இருப்பு விகிதம் 3.46 சதவீதம் மட்டுமே.
* மொத்த வராக்கடன் 23.27 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 9.81 சதவீதமாகவும் உள்ளது. சொத்து வருவாயும் குறைந்து விட்டது.
* வராக்கடன் அதிகரிப்பு, வருவாய் குறைவு ஆகிய காரணங்களால், கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 335 கோடி.
* ஏற்கெனவே சில நிறுவனங்கள் இந்த வங்கி பங்குகளை வாங்கும் முயற்சிக்கு ரிசர்வ் வங்கியால் முட்டுக்கட்டை போடப்பட்டு விட்டது. தற்போது ரிசர்வ் வங்கி உதவிதான்தான் நிலைமை சீராகும் என கூறப்படுகிறது.
* இந்த வங்கியின் பங்கு மதிப்பு அதிகபட்சமாக 2017 ஜூலையில் 188.30 ஆக இருந்தது. இது தற்போது 14 ரூபாய்க்கும் கீழ் சரிந்து விட்டது



Tags : Laxmi Vilas Bank ,RBI , RBI, Lakshmi Vilas Bank
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...