×

தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை: ஹர்திக் வரவால் ரசிகர்கள் உற்சாகம்

தர்மசாலா: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி, தர்மசாலா இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. சமீபத்தில் நியூசிலாந்து சென்ற இந்திய அணி, முதலில் நடந்த டி20 தொடரில் 5-0 என ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது. ஆனால், அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியதுடன், டெஸ்ட் தொடரையும் 0-2 என இழந்தது கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. வீரர்கள் தேர்வு மற்றும் வியூகங்களில் சொதப்பியதுடன், சொந்த பார்மையும் இழந்து தவித்து வரும் கோஹ்லி கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார்.

இந்த நிலையில், சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடக்கும் ஒருநாள் தொடரில் இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, முழு உடலதகுதியுடன் விளையாடத் தயாராகி இருப்பது, இந்திய அணிக்கு வலு சேர்த்துள்ளது. டி.ஒய்.பாட்டீல் தொடரில் அதிரடியாக இரண்டு சதங்களை விளாசி அசத்திய ஹர்திக், சர்வதேச அரங்கில் மீண்டும் முத்திரை பதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார். தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக ரோகித் இடம் பெறாத நிலையில், பிரித்வி ஷா இன்னிங்சை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல பார்மில் உள்ள கே.எல்.ராகுல் நடுவரிசையில் களமிறங்கலாம். ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில்... பூம்ரா, புவி, சைனி வேகக் கூட்டணி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.

ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஜடேஜாவுடன் குல்தீப் அல்லது சாஹல் இணைந்து சுழற்பந்துவீச்சுக்கு பொறுப்பேற்பார்கள். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அதே சமயம், டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியில் இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்க அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. முன்னாள் கேப்டன் டு பிளெஸ்ஸியின் அனுபவமும் அந்த அணிக்கு கை கொடுக்கும்.ஹெய்ன்ரிச் கிளாஸன், கைல் வெர்ரைன் நல்ல பார்மில் உள்ளனர். பெலுக்வாயோ, லுங்கி என்ஜிடி,  அன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.

தர்மசாலாவில் தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. இங்கு சேஸ் செய்த அணி 3 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. 2வது போட்டி லக்னோவில் மார்ச் 15ம் தேதியும், கடைசி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் மார்ச் 18ம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யஜ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ஷுப்மான் கில்.

தென் ஆப்ரிக்கா: குவின்டான் டி காக் (கேப்டன்), தெம்பா பவுமா, ராஸி வான் டெர் டஸன், பேப் டு பிளெஸ்ஸி, கைல் வெர்ரைன், ஹெய்ன்ரிச் கிளாஸன், ஜானிமன் மாலன், டேவிட் மில்லர், ஜான் ஜான் ஸ்மட்ஸ், அந்திலே பெலுக்வாயோ, லுங்கி என்ஜிடி, லுதோ சிபம்லா, பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மகராஜ்.


Tags : Dharamsala ,India ,South Africa , Dharamsala, ODI, India, South Africa, Hardik
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...