×

புலிகள் காப்பகங்களில் காவலர்களுக்கு வசதிகள்

சென்னை: அனைத்து புலிகள் காப்பகங்களிலும் வேட்டை தடுப்பு காவலர்களுக்காக  அடிப்படை வசதிகள் கொண்ட போக்குவரத்து முகாம்  அமைக்கப்படும் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் வனத்துறை மீதான மானியக்கோரிக்கையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ெவளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

*  தமிழக வனத்துறையில் உள்ள பழமையான 71 கட்டிடங்களை பாதுகாத்து, பராமரித்து,  மேம்படுத்தி மறுசீரமைக்க ரூ.10 கோடி செலவில் மறு  சீரமைப்பு பணிகள்  மேற்கொள்ளப்படும்.
* சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட  ஆசனூர் வனக்கோட்டத்தில் ஒன்றும், முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒன்றும்  கலைநயம் மிக்க  கருத்து விளக்க கூடத்துடன் கூடிய சிறு கூட்ட அரங்கம் ரூ.7  கோடி செலவில் அமைக்கப்படும். உள் மற்றும் திறந்த வெளிக்கூடங்கள்,   கலந்துரையாடல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இது  அமைய பெற்றிருக்கும்.
* தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில்  1100க்கும் அதிகமான வேட்டை தடுப்பு காவலர்கள், புலிகள் காப்பகங்களிலும்  அதனருகில் உள்ள  காடுகளிலும் தொடர்ச்சியாக பல நாட்கள் பணிபுரிய  வேண்டியுள்ளது. அவர்கள் வனங்களில் தங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லை.  எனவே,  இப்பணியாளர்களுக்கு தங்குமிடம், சமையலறை, உணவருந்தும் அறை, கழிப்பறை  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் பொருட்டு புலிகள்  காப்பகங்களில்  தலா ஒன்று வீதம் 4  வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான 4 போக்குவரத்து  முகாம்கள் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படும்.
* நாமக்கல் மாவட்டம்  கொல்லிமலையில் பாரம்பரிய மற்றும் பல்லுயிர் பூங்கா, சூழலமைப்பிற்கேற்ப  பாலம், மருத்துவ தாவரப்பூங்கா, பழங்குடியினர்  அருங்காட்சியகம், குழந்தைகள்  விளையாடும் இடம், பூங்கா போன்றவை ஆகாய நீர்வீழ்ச்சி பகுதியில் ரூ.3 கோடி  செலவில் உருவாக்கப்படும்.

மீனவ மக்கள் முன்னேற1,200 கோடி நிதி  
நாகப்பட்டினம் தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி):நாகை தனியார் துறைமுகத்துக்கு கப்பல்கள் வந்து செல்ல மணல் கொட்டி   மணல்மேடு உருவாக்கப்படுவதால் கப்பல்கள் அதில் மோதி மீனவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார்: மீனவ மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்காக 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. நாகை அருகே எந்த காலத்திலும் வராது என்ற சூழ்நிலையில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் துறைமுகம் அமைக்கும்  பணி நடைபெற்று வருகிறது. தரங்கம்பாடி வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும்.

 குளச்சல் பிரின்ஸ் (காங்கிரஸ்): குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே தூண்டில் வளைவு இல்லாததால் மணல் திட்டு உருவாகி மீனவர்கள்  பாதிக்கப்படுகின்றனர். படகுகள் எளிதாக வந்து செல்லும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.  அமைச்சர் ஜெயக்குமார்: முகத்துவாரம் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதை ஆழப்படுத்தி, அகலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து  வருகிறோம். மீன்வளத்துறையில் ஒதுக்கப்படும் 50 சதவீத நிதி நாகை மற்றும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு தான் ஒதுக்கப்படுகிறது.

குடிநீர் தொட்டிகள்கட்டுவதில் தாமதமா?
ஒரத்தநாடு ராமச்சந்திரன் (திமுக) : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்  மூலமாக தமிழகம் முழுவதும் நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு   வந்தது. ஆனால், தற்போது உள்ளாட்சி துறை சார்பில் குடிநீர் தொட்டிகள்  அமைக்கும் பணி நடைபெறுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. அமைச்சர் வேலுமணி:  குடிநீர் வடிகால் வாரிய திட்டம் மூலம் நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகள்  கட்டப்படுகிறது. ஆனால் லோக்கல் சோர்ஸ் மூலம்  அதாவது, எம்எல்ஏ, எம்பி  நிதிகளை பெற்று குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி வேகமாக நடக்கிறது.  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கேட்கக்கூடிய  சின்ன சின்ன குடிநீர் தொட்டிகள்  அப்படிதான் கட்ட முடியும். அவசியம் இருக்கக்கூடிய இடங்களில் குடிநீர்  வடிகால் வாரியம் மூலம்தான் மேல்  நீர்தேக்க தொட்டிகள் கட்டப்படும்.

சோலார் மின்சாரம் திமுக குற்றச்சாட்டு
கீழ்பென்னாத்தூர் பிச்சாண்டி (திமுக): சோலார்  திட்டத்தில் கர்நாடக  மாநிலத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் திட்டங்கள்  பயன்படுத்தப்பட்டு மின்சாரம்   தயாரிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில்  கடலாடி திட்டத்தை மத்திய அரசு  ரத்து செய்துள்ளது. சோலார் மின்சாரம் தயாரிப்பில்  தமிழகம்   பின்தங்கியுள்ளது. அமைச்சர் தங்கமணி: கடலாடி சோலார் மின்  திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடையாணை  பெற்றுவிட்டனர்.  இதனால் திட்டமிட்டபடி சோலார் திட்டத்தை தொடங்காததால், கால  அவகாசம் நிறைவடைந்ததாக கருதி மத்திய அரசே திட்டத்தை ரத்து செய்து  விட்டது.  எனவே, மாற்று இடம் கமுதியில் கொடுத்திருக்கிறோம். அங்கு கர்நாடகாவைப்போல,  விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து சோலார்  மூலம் 500 மெகாவாட் மின்சாரம்  தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.


Tags : Facilities ,Police for Facilities , Facilities ,police ,Tiger archives
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...